Thursday, September 20, 2012

என்னமோ எண்ணமோ அறியேன்


 என்னமோ கேட்டு எழுந்தது  வானில்
இயற்கையின் விளையாட்டு -அது
இன்னமும்  ஏனோ தொடர்வது காண
ஏங்குது பெருமூஞ்சு
சொன்னவை ஏனோ வண்ண நிலாவாய்
சிரிக்குது எதைப் பார்த்து - அட
கண்மணி போதும் காலையில் எழலாம்
கவலையில்லைத் தூங்கு

நல்லதோர் வாழ்வும் நடிப்பதென்றாகும்
நானிலம் பெரு மேடை - அதில்
செல்பவன் எல்லாம் சீரிய நடிகர்
சிறப்பினில் குறையில்லை
அல்லவோ புவியும் ஆண்டவன்ஆடும்
அழகுக் காற்பந்து - துயர்
இல்லைநீ கண்ணே எல்லையில் வானம்
இருண்டது கண்தூங்கு

கல்லையும் எறிந்தால் காயங்கள் வருமோ
கடவுளின் திருமேனி-  அது
வில்லையும் வைத்து வீசுவதாலே
விளைவுகள்  பெறும் சக்தி
சொல்லதனாலே உரைத்திட சங்கு
சுடுவது போல் மிளிரும்-   அட
நல்லவளேநீ நித்திரைகொள்ளு
நன்மைகள் கூடிவரும்

தோட்டத்திலாடும் சுந்தரப் பூக்கள்
சொல்லியும் மலர்வதில்லை -அவை
கேட்டெதுவண்ணம் கொள்வதென்றேயக்
காற்றிடம் கேட்பதில்லை
ஏட்டினில் பூக்கும் பாட்டுக்கள் தானும்
இங்கது போலும் நிலை -  தன்
பாட்டினில் வளரும் பக்குவம் உண்டு
பார் விழி தூங்கவில்லை

வெட்டி வளர்த்தனர் ரோஜாநின்றது
வீட்டின் முற்றத்திலே - அது
மொட்டென விட்டு முகிழ்ந்தன பூக்கள்
முற்றும் பெரு அழகே
கட்டவிழ் மலரோ அற்புத அழகு
கண்டவர் போற்றும் நிலை - காண்
கட்டழகே நீ கண்ணுறங்காய் - இது
காட்டினுள் பூத்தவகை

***************

2 comments:

  1. கவிதையும் அதற்கான விளக்கமும் அருமை... நன்றி...

    ReplyDelete
  2. தங்களுக்கு என்றும் நன்றியடைவனாக இருப்பேன். சிலசமயங்களில் நான் நன்றிசொல்லாவிட்டாலும் தங்கள் பாராட்டு எனக்கு உணவாகவும் என்கவிக்கு உரமாகவும் இருக்கிறது என்பதை நன்றியோடு கூறிக்கொள்கிறேன்

    அன்புடன் கிரிகாசன்

    ReplyDelete