Sunday, September 9, 2012

யாருக்கு யார்?

பூவுக்கு வாசமும் பொன்னுக்கு மின்னலும்
பொய்கையில் தண்ணலையும்
ஆவுக்கு சாந்தமும் அன்னைக்கு அன்பதும்
ஆதவன் வெம்மையதும் 
நாவுக்கு இன்சுவை நாட்டுக்கு நல்லவன்
நாளுக்கு காலையென
பாவுக்கு சந்தமும் பாட்டுக்கு ராகமும்
பார்ப்பது இன்பமன்றோ

தேவிக்குப் பூசையும் தேன்மதி ஓடிடத்
தெள்ளெனும் வானமதும்
ஆவிக்குத் தீயதும் ஆடைக்கு நூலதும்
ஆற்றுக்கு கீழ்நிலமும்
கூவும் குயிலோசை கொண்டிடச் சோலையும்
கோவிலில் தெய்வமதும்
தூவி மழைபெய்யத் தூரத்து மேகமும்
தேவைகள் ஆகுமன்றோ!

மாவிற் கனியதும் மாலைக்குத்  தென்றலும்
மாதர்க்கு புன்னகையும்
ஓவியம் வண்ணமும் ஒலைக்குச் செந்தமிழ்
உண்ண அறுசுவைகள்
வாவிக்கு நீரதும் வந்த அலைகளும்
வாழ்ந்திடும் மீனினமும்
பூவிற்கு தேனதும் புன்னகை கொள்முகம்
போன்ற  இனிமை யன்றோ

பாவைக்குக் காமுகன் பண்புக்குப் பாதகன்
பார்க்க இழிசெயலும்
தேவைக்கு சூனியம் தீவில் புயலதும்
தேகத்தில் ரோகமதும்
சேவைக்கு  ஆணவம் சிந்தைக்கு வஞ்சனை
செய்கைக்கு சோம்பல்குணம்
யாவையும் கொள்ளவோர் பேராசை யாம்குணம்
வாழ்வுக்கு தீமையன்றோ

1 comment:

  1. எதற்கு எது என்பதை அழகாக ஒப்பிட்டு, முடிவில் குணங்களையும் ஆராய்ந்தது அருமை...

    ReplyDelete