Sunday, September 30, 2012

கூவாத குயில்!

(மனதில் சிறுகவலை! கவிதை எழுத உள்ளம் மறுக்கிறது. அந்த உள்ளே கூவும் குயிலை நோக்கி)

கூவிக் களித்திடும் கோகிலமே உனைக்
கூட்டி லடைத்தவர் யார்
ஆவியிழந்தவன் போற்துடித்தேன் துயர்
ஆகிடச் செய்தவர் யார்
நாவிலிருக் கும்நற் தேன்மொழியை தினம்
நீயும் தர மகிழ்ந்தேன்
ஈவிரக்கம் அறியார் எவர்தான் உன்னை
இன்னல் செய்தாருளதோ

காவிவரும் இசைத் தென்றல்நிதம் இன்றோ
காணு மினிமை யில்லை
மேவி உலகினில் கேட்குமொலி  இன்று
மிச்சமெதுவு மில்லை
பா விதுவோ நறும் பூமலர்வோ எனப்
பார்த்து களித்திருந்தேன்
நாவினோத மொழி நல்கவில்லை ஏது
நாளில் நடந்ததென்ன?

தூவிக் களித்திடும் பூக்களுன்மேல் மரம்
தூவ மறுத்ததுவோ
தாவித் திரிந்திடும் மந்திகளும் கண்டு
தம்முள் நகைத்தனவோ
ஏவிவிட்டே வரும் அம்பென உள்ளமும்
ஏதும் துயர் பட்டதோ
கேவியழும் வகை திண்மை குலைந்திடக்
கூவலை ஏன்மறந்தாய்

மாவிலிருந் திளங்காலை யிற்கூவிட
மா சுகம் கொண்டிருந்தேன்
பூவிலிருந்த மதுவிது வோவென
புத்தின்பம் கொண்டிருந்தேன்
கூவுமிளங்குரல் வேண்டியே மாமரக்
கூடலை நோக்கிநின்றேன்
காவிப் பெருந்துன்பம் கொண்டனையோ
எனக் காணத் துடிப்பிலுள்ளேன்

நீதியில்லை மலர் நித்தம் மலர்ந்திடும்
நின்றிடப் பார்த்ததில்லை
பாதியிலே வருஞ்சூரியனும் விட்டுப்
பாதை விலகவில்லை
ஏதிளங் காற்றுக்கும் என்னநடப்பினும்
இல்லை யென்றாவதில்லை
வா தினம் கூவுங் குயிலே மறந்தொரு
காலமிருப்ப துண்டோ?

2 comments:

  1. கவிதை எழுத உள்ளம் மறுக்கிற போதே இவ்வளவு நல்ல சிந்தனை வரிகள்... அருமை...

    மிகவும் பிடித்த வரிகள் :

    /// மேவி உலகினில் கேட்குமொலி இன்று
    மிச்சமெதுவு மில்லை
    பா விதுவோ நறும் பூமலர்வோ எனப்
    பார்த்து களித்திருந்தேன் ///

    ReplyDelete
  2. மேலும்மேலும் நன்றிகள் உரித்தாகுக!
    அன்புடன் கிரிகாசன்

    ReplyDelete