Tuesday, May 3, 2011

ஈழம் எழில் தேசம்

பச்சை வயல் வெளிக் காற்று கதிர்களில்
பட்டு மேனி தொட்டு ஓடும்
சச்சச் சலவெனச் சத்தமிட்டே நாணி
சற்றுக் குனிந்துநெல் ஆடும்
அச்சச்சோ பாரடிஎன்று குருவிகள்
ஆலோலம் பாடிப் பறக்கும்
இச்சை தருமெழில் இன்பம்நிறைமணி
ஈழமென்னும் தமிழ்த் தேசம்

மெச்சுமெழில் நெற்றி பொட்டும் வியர்வைக்கு
மேனியில் முத்துக்கள் தோன்ற
உச்சி வெயிலினில் நின்று வெட்டிக்கதிர்
ஓர மடுக்கிடும் பெண்கள்
மச்சவிழி கணை மார்பி லெறிந்திட
மையலுறு இள மைந்தர்
இச்சையுடன் கதிர்கட்டி ஏற்றிவண்டி
இன்பங்கொளும் ஈழதேசம்

கட்டைவண்டிதனில் காளை சலங்கைக்கு
கால்கள் தாளமிட ஓடும்
வட்டமடித்தோடி வள்ளென நாய்களும்
விட்டுத் துரத்திடக் காணும்
பட்டணிந்து சிறுதம்பிகள் தங்கையர்
பெற்றவர் கைபிடித் தேகும்
எட்ட இருந்திடும் கோவில் குளமென
ஈழதேசம் எழில்காணும்

நெட்டைப் பனைமரம் நிற்க அதன்பின்னே
நீலவிண்ணில் முகிலோடும்
தொட்டுவிட வானத்தூர முயர்கோவிற்
தொங்கு மணிநாதம் கேட்கும்
வட்டகுளத்தினில் வானச் சுடர்கண்டு
வண்ண மலர் தலையாட்டும்
பட்டுசிறகுடன் பற்பல வண்ணத்துப்
பூச்சிகள் தேனுண்ண நாடும்

எட்டிக்குதித் தலை மீதெழுந்து துள்ளும்
ஏந்திழை கண்ணென மீனும்
கொட்டிக் கிடந்தெழில் கொஞ்சும் சுனைதனில்
ஒட்டிக்குளிர்த் தென்றல் வீசும்
தொட்டது மேகமென்றே வளர்ந்தே யுயர்
தென்னைகளில் இளநீரும்
சுட்ட வெயிலுக்குத்தாகம் தணித்திடும்
சூழல்கொள் ஈழ மெம்நாடு

நீள அலை விரித்தாடும் கடலதில்
நெய்குழல் மங்கையர் போலும்
ஆழமனதினில் ஆயிரம் எண்ணங்கள்
அத்தனையும் மறைத்தாடும்
மூழ்கிஎழுந்திட முத்துக்கள் சிப்பியில்
மூடிவைத்த குவை தேறும்
தோள்விரி மைந்தரும்தீரமுடன் கப்பல்
தோணிகள் ஓட்டிடும் தேசம்

வாழைக் கனிகொண்டு வானரங்கள்கிளை
தாவி மரந்தனில் ஏறும்
வேளைதனில் கனிமாவின் சுவைகண்டு
விட்டு ஒருஅணிலோடும்
கீழை மரக்கொப்பில் காணும்பலாக்கனி
கோதிகிளி யொன்று பேசும்
காளை ஒன்றுஅதன் கீழிருந்து அம்மா
காணென்று யாரையோ தேடும்

பூவிரி சோலைகள் பூம்பொழில் நீர்ச்சுனை
புல்விரிந்த பசும்தேசம்
தேவரின் வானுல கானது தோற்றிடும்
தீந்தமி ழீழம் எம்தேசம்
தீயெரிந் தேசுடு காடென மாறிடச்
சிங்களமே பழியாகும்
போய் விரிந்தே விதிபோடும் கணக்கது
பாதைமாறித் தெற்கும் சேரும்

காலமெனும் சுழல் சக்கரமானது
கீழும் மேலும் நிலைமாறும்
ஞாலம் சுழன்றிட நாளு மிரவுடன்
காலை பகல் என்றுஆகும்
கோலம் அவரது கொண்டது மாறியே
கூடி யழுதிட நேரும்
சீலமுடன் நம்ம தேசமமைந்திட
சேரும் வளங்களோ மீளும்

1 comment:

  1. உள்ளம் உருக கண்ணீரே-என
    உடையை நனைக்க தண்ணீரே
    வெள்ளம் போல வந்ததுவே-பெரும்
    வேதனை தன்னை தந்ததுவே
    கள்ளர் சிங்கள கயவர்களே-சற்றும்
    கருணை யில்லா தீயர்களே
    கொல்லப் படுவீர் ஒருநாளே-ஈழம்
    உரிமை பெற்றிடும் திருநாளே

    புலவர் சா இராமாநுசம்
    சென்னை 24

    ReplyDelete