Monday, February 21, 2011

மன்னனின் அன்னை மறைந்தனள்



மாமலையை தோள்களிலே சுமந்தவரும் -ஈழ
மன்னவனைத் தன் மடியில் கண்டவரும்
தேமதுர குரலெடுத்து தாலாட்டி -அந்தத்
தெய்வமகன் கையணைத்து சீராட்டி
போமகனே பள்ளிஎன்று விட்டவரும் -பின்பு
போர்முடிக்க செல்லவிடை தந்தவரும்
பூமியிலே சோர்ந்து துயில் கொள்ளுவதேன் -ஒரு
பூமரத்தைபோல் ஒடிந்து வீழ்ந்ததுமேன்

நானிலத்தை நடுநடுங்க வைத்தவனாம் -பல
நாடுகளைப் பீதியுறச் செய்தவனாம்
தான் நிலத்தை காத்து மண்ணை ஆண்டவனும்- ஒரு
தலைவனெனில் என்னவென்று காட்டியவன்
மாநிலத்து மன்னனுக்கு தாயுமிவள் -ஒரு
மணிமுடிக்கு அருகில்நிற்கும் அன்னையவள்
ஆ..!நிலத்தில் வீழ்ந்திருக்க அழுகிறதே- மனம்
ஆற்றவழி யின்றி நெஞ்சு துடிக்கிறதே

ஐந்துவிரல் அமுது ஊட்ட வளர்த்தவனாம்- இந்த
அகிலமெங்கும் கிடுகிடுக்க வைத்தவனாம்
செந்தமிழை பூமியிலே கேட்டவர்கள் -இது
சீறி வரும் வேங்கையென்று அஞ்சிடவே
சொந்தபடை நாடு மக்கள் கொண்டவராம் -ஒரு
சொல்லினிலே மக்கள் மனம் வென்றவராம்
விந்தைதனைப் பெற்றவரே வீரமகள் -இன்று
விழிகள் மூடித்துங்குகிறார் வேதனையே

பட்டதுயர் எத்தனைதான் பாருமம்மா -உன்
பக்குவமோ எங்களுக்கு இல்லையம்மா
சுட்டழிக்கும் சிங்களதின் பார்வையிலே- பெரும்
சொல்லரிய துன்பமுற்றும் ஈழததிலே
விட்டுவிடு இந்தமண்ணில் விதையாவேன் -நான்
வீழ்ந்திடினும் எம்மண்ணில் தலைசாய்ப்பேன்
சொட்டு நீரை விட்டுமுயிர் போகையிலே -என்
சொந்த மண்ணின் நீர் குடித்து செல்லவென

கட்டிலிலே நீபடுத்துக் கலங்கியதும்- ஒரு
கன்றிழந்த தாயெனவே கதறியதும்
விட்டு மறந்தெங்கள் வாழ்வு இல்லையம்மா -நின்
வீரமகன் காட்டும்வழி நாம்நடப்போம்
தட்டியினி நீதிகேட்கும் காலமிது -இனி
தலையெடுத்து நாம்நடந்து ஈழமதை
கட்டியொரு நாளமைத்து காத்திடுவோம் -அன்று
கையெடுத்து உனைவணங்கி தொடர்ந்திடுவோம்

No comments:

Post a Comment