Thursday, February 17, 2011

மரணத்தின் மடி.

தேவன் கோவில்மணி ஒலிக்கின்றது- ஒரு
தீபம் அசைவதங்கு தெரிகிறது
பாவம் கணக்கெழுதி முடிக்கிறது= ஒரு
பாலம் விழி எதிரில் பிறக்கிறது

வாவென்றிரு கரங்கள் அழைக்கிறது- ஒரு
வாசல் திறப்பதங்கு தெரிகிறது
போவென் றெனைவாழ்வு சினக்கிறது- நான்
போகும் பாதை விளக் கொளிர்கிறது

பாசம் விழிகளினை மறைகிறது- ஒரு
பாரம் மனதில் சுமை கனக்கிறது
நேசம் இருந்துவிடக் கேட்கிறது- என்
நெஞ்சம் போராடித் தோற்கிறது

கூடி இருந்த உடல் துடிக்கிறது -அதன்
கோலம் எதை நினைத்து சிரிகிறது
ஏடும் கதை தொடரும் எழுதியதை- புள்ளி
இட்டே முழுதும் என முடிக்கிறது

ஓடும்நதி கடலில் கலக்கிறது- அதன்
ஓசைஅடங் கமைதி பிறக்கிறது
வாடும் மனது இனி வசந்தம்மென- தனை
வாட்டும் கடும்துயரைப் பழிக்கிறது

சேரத் திரிந்தநிழல் பிரிகிறது- தினம்
செய்யும் மணியொலியும் சிதைகிறது
தேரும் வழியில் தடம் புரள்கிறது- சென்ற
திக்கில் தெருமுடிந்து கிடக்கிறது

2 comments:

  1. நெஞ்சம் கனக்க வைக்கும் வரிகள் ..........

    ReplyDelete
  2. நெஞ்சம் கனக்கிறது நண்பரே ............

    ReplyDelete