Thursday, February 17, 2011

தாய் நிலம் காத்திடு!

வெண்ணிலா வானத்தில் காயுது ஆயினும்
வீட்டில் இருள் நிலைதான்
தண்ணலை கொண்டு தளும்புது பொய்கையும்
தாகத்தில் நம்மினம்தான்
கண்களில் நீர்வழிந் தோடுது எங்கணும்
காற்றில் பெருங் குரலாம்
மண்ணில் விடுதலை வேண்டிய மானிடர்
மாளுவ தும்விதியாம்

பொன்னொளி யொன்று சுடர்கொண் டெழுந்தது
பூமி ஒளிர்ந் ததுவாம்
மின்னிவெடித்திட எம்பகை வென்றதும்
முற்றும் சரித்திர மாம்
கன்னியர் கற்புடன் கண்டுமகிழ்ந்ததும்
காதல் கொண்டாடியதும்
இன்னும் மனதினில் உள்ள நினைவுகள்
இன்றது போனதடா

பெண்ணைப் பிடித்தவர் கற்பைக் கெடுத்துமே
பெண்ணவள் நாணவுடல்
கண்களும் கூசிட கற்பனை கொவ்வாத
காட்சியென் றாக்குகிறார்
எண்ணக் கொதித்திடும் இச்சைகள் செய்தவர்
ஏங்கித் தவிக்கையிலே
பண்ணு மிசைத்தவர் பாடல் படித்துமே
போதையி லாடுகிறார்

எத்தனை கொடுமை சித்திரவதைகள்
நித்தம் நடந்திடினும்
ரத்தம் துடித்திட நித்திரை யின்றியே
நெஞ்சு துடித்திடினும்
சத்தியம் கண்ணைவி ழிப்பதில்லை அதைக்
கட்டி மறைத்தனரோ
நித்தம் விடிவது மற்றவர்க்கே எங்கள்
நேசநிலத் துக்கில்லை

பட்டாசுபோல வெடித்தெழடா வெறும்
மத்தாப்பூ வாணமில்லை
தொட்டால்கை கொள்ளத் துணிந்திடடா பின்னர்
தொட்டிட ஏதுமில்லை
விட்டால் நம்மீழமே புத்த மகனவர்
சத்திரம் ஆகிவிடும்
தட்டிநிமித்தி தென் பக்கமெறிந்திடு
தாய்நிலம் காத்திடடா!

No comments:

Post a Comment