Thursday, February 17, 2011

என்ன செய்வேன்?

மெல்லிய புன்னகை மேவி இதழ்களில் சென்றது பூமலரில்
மல்லிகை முல்லையும் மங்கலபூக்கள் மலர்ந்தன என்னருகில்
துல்லியமாய்க் குளிர் நீரும்கிடந்தது தோட்டத்து நீர்க்குளத்தில்
கல்லைஎடுத்து எறிந்திடுமோ இந்தக் கைகளும் இந்நிலையில்?

வெள்ளிடைமேகம் விரிந்து பரந்தது வானக்கருங் குளத்தில்
தெள்ளென வானில் நிலவு எறித்தது தேனொளிதான் புவியில்
துள்ளி இசைகொண்டு ஆடினள்தேவியும் தோன்றி எனதருகில்
அள்ளி அழகைப் பருகுவதோ யன்றி ஆத்திரம் கொள்ளுவதோ?

சின்னக் குழந்தைகள் கூடிநின்றே சிலசெய்தன சில்மிசங்கள்
என்னவென்று சொல்ல என்னைப்பிடித்து இழுத்தன ஈர்கரங்கள்
முன்னே யிருந்துமே துள்ளி என் தோள்களில் தொங்கின பூங்கிளிகள்
பின்னிய கைகளை மெல்லத் திறப்பனோ பேசிஅடித்திடவோ?

காதலர் சேர்ந்து களித்தனர் அச்சமே காணவில்லை மனதில்
ஆதவன் மேலைக் கடல்மறை வேளையில் ஆசையுடன் கரையில்
மாதவள் வெட்கியே என்னயல் கண்டனள் மாறிடவே உணர்வில்
ஏதுநான் பின்னு மயல்நிற்கவோ இல்லை ஏகிவிட்டேன் தொலைவில்

ஆலயம் நோக்கி அசைந்தனர் அங்கங்கு ஆடவரும் மகளிர்
கோலமணி யொலித்தாடின அந்தணர் கூறும் இசையிடையில்
பாலில்குளித்து அக்கோவிற் சிலைதனும் பூசைபெறும் நிலையில்
நாலைந்து பூக்களை நானுமிடுவனோ? நாத்திகம் பேசுவதோ?

No comments:

Post a Comment