Thursday, February 17, 2011

தை பிறந்தது, வழி பிறந்ததா ? இன்னொன்று (2வது)

எத்`தை` வந்துவழிபிறக்கு மென்பரோ
அத்`தை` வந்து ஆனதென்ன வாழ்விலே
சொத்தை வாழ்வும் சூழும் துன்பமாகியே
நித்தங் கண்ணில் நீரும் கொட்டக்காணுதே!

எத்தனைதான் செய்தபாவம் வாழ்விலே!
சுத்திச்சுத்தித் துன்பம்வந்து  சூழ்ந்துமே
சொத்து சுகம் அத்தனையும் அள்ளியே
நிர்க்கதியாய் நிற்கவிட்டுப் போகுதே

கொத்துகொத்தாய் செத்து இனம் மண்ணிலே
வித்துக்களாய் போயழிந்து மாளுதே
இத்`தை` வந்துஎன்ன பயன் பாரிலே
சத்தியமாய் எவ்வழியும் தோன்றலே

வைத்தகுறி எம்பகைவர் ஈழமே
அத்தனையும் கொள்ளைகொண்டு நம்மையே
சுத்தியுள்ள தீவின்கடல் தள்ளியே
புத்தமதத் தீவென்றாக்கத் எண்ணமே

ஒத்து ஊதிக் காலமகள் கூடவே
கத்திப் பெருஞ்சூறைகாற்றும் வெள்ளமே
சுத்தி வரும்சூழலை சுனாமியே
அத்தனையும்வந்து எம்மைகொல்லுதே

நர்த்தமிடும் எம்சிவனே நங்கைகொள்
அர்ததநாரி ஈஸ்வரனே ஆண்டவா
வைத்த முடிகங்கையோடு சண்டையா
வந்தவளோ எம்மைகொல்வதேனடா

தை பிறந்து இவ்வுலகம் ஆடியே
தெய்வமெனச் சூரியனைப் பாடியே
நெய்யும்மிட்டுத் தேன்சுவைத்த பொங்கலை
கையழைந்து உண்ண நாமோ மண்ணிலே

மெய்கிழித்து ரத்தம்வரப் பாவியாய்
பொய்த்து உடை இன்றியேநிர் வாணமாய்
கைபிணைத்துக் கட்டிபெரும் பேய்களால்
கொய்துஉயிர் கொள்ளச் சேற்றில் சாகுறோம்

வழிபிறக்க வில்லை என்பதொன்றடா
விழிதிறக்கக்கூடச் சக்தி இல்லைடா
மொழி கதைத்த தமிழனென்ற தானதால்
குழிபறித்து வாழ்வு மண்ணுள்போகுதே

ஒளித்தலைவன் ஒருவன் எங்கள் சூரியன்
வழித்தடத்தில் கால்பதித்து வாழ்வையே
அழித்த பகை கையிருந்து ஈழமாம்
விழித்துஎழ மீட்டிடுவோம் வாருமின்!

செழித்துஈழம் மீண்டுமாட்சி கொள்ளட்டும்
பழித்தவர்கள் பாவி மண்ணுள் போகட்டும்
வெளித்து வானம் கருமுகில்கள் ஓடட்டும்
வழிபிறந்து தையும் வந்து சேரட்டும்

அதுவரையில் வருவதொன்றும் தையல்ல
பொதுவுலகின் கதையுமெங்கள் கதையல்ல
புதுவழியில் விடுதலை நாம் பெறும்வரை
இது புரியாவிடுக`தை` எம்துயர்க`தை`

No comments:

Post a Comment