Thursday, February 3, 2011

தமிழுக்கு துயர் என்று பேர்


தமிழுக்கு எழில் என்று பேர் அந்தத்
தமிழ் எங்கள் ஈழத்தில் தவிப்பதும் ஏன்?
தமிழுக்கு இனிதென்று பேர் அந்த
தமிழ் எங்கள் தேசத்தில் அகதிக்குப் பேர்
தமிழுக்கு கதிர் என்று பேர் ஈழத்
தமிழ் இன்று ஒளிகுன்றிச் சிறை கொண்ட போர்
தமிழ் கொஞ்சும் கலை கொண்ட தேர் அந்த
தமிழ் இன்று ஈழத்தில் அழியுது பார்!

தமிழ் எங்கள் உரிமைக்கு வேர் அந்த
தமிழ் கொண்ட நிலமின்று எதிரிக்குப் பாய்
தமிழ் எங்கள் விழி போன்ற தோர் அந்தத்
தமிழ் இன்று விழிதேங்கி வழிகின்ற நீர்
தமிழ் எங்கள் எழில் கொண்ட தேர் இங்கு
தமிழ் சொல்லும் இனம் கொல்ல அழுமெங்கள் ஊர்
தமிழ் எங்கள் மதுவென்னும் தேன் இன்று
தமிழ் கொல்ல வருவோர்க்கு வெறியூட்டும் தேன்

அவனுக்குக் கரன் என்றுபேர் அந்த
மலைஎன்ற திடங்கொண்ட தலைமைக்குப் பேர்
அவனுக்குப் புகழ் என்றுபேர் இந்த
அகிலத்தில் இனம் காக்க இவனன்றி யார்?
அவனுக்கும் அனல் என்று பேர் வந்து
அயல்நின்ற எதிரிக்கு உயிர் கொள்ளும் தீ
அவனுக்குக் கனல் என்றுபேர் நெஞ்சில்
அவன் கொண்ட கனவுக்கு வழியொன்று தேர்

தமிழ் எங்கள் கைகொண்ட வாள் அன்று
தமிழ் சொல்லின் பகைவர்க்கு கிலிகொண்ட நாள்
தமிழ் ஈழப்படை கொண்டு தான் வென்ற
தவைப்பேசப் பலதாகும் கதை கூறும்நாள்
தமிழ் எங்கள் பசி தீரப் பால் அந்தத்
தமிழ் எங்கள் வானத்தின் விடிவெள்ளிபோல்
மகிழ் விக்கு மோர் நாளில்நாம் அன்று
தமிழன்னை முடிசூடும் திருநாளும் பார்




குறிப்பு>
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகளை நேசிக்கும் அனைவரும் இந்த
கவிதையை மாற்றி எழுதி அதன் தரத்தை கெடுத்துவைத்திருக்கிறேனே என்று
கோபப்படாமல் குறை நீக்கி பொருள் கொள்க. நன்றி!

No comments:

Post a Comment