Saturday, February 19, 2011

இன்னுமொரு தூது வேண்டுமா?

(புலம் பெயர்ந்த தமிழீழ மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையே தான் மத்தியஸ்தம் வகித்து ஒற்றுமையை ஏற்படுத்தத் தயார் என்று ஒரு நாட்டின் பிரதிநிதியின் அறிவிப்பை எண்ணி இக் கவி பிறந்தது)


ராமபிரான் ஒரு தூது கொண்டான் விண்ணில்
நீந்தி அனுமன்சென்றான்
யாமறிவோம் பெருந்தீயெழுந்து முழு
நாடும் அழிந்ததுவாம்
நாமதுபோ லொரு தூது கொண்டோம் அது
ஈழ மெரித்ததுவும்
பூமியிலே தமிழிழ மறவர்கள்
போனதும் நாடறியும்

ஏதுஇனியொரு மீதி இருப்பவர்
தீயில் எரித்திடவா
தூதுஎழுந்து வருகிறது ஒரு
தோற்றம் எடுக்கிறது
நாதியற்றோர் இவர் நல்லவரேஎன
நாட்டு அரசரெல்லாம்
காதுமுறுக்கிட நாம்கிடைத்தோம் அதன்
காரணமென்ன கண்டோம்

பாதி தமிழரும் பாதியில்சிங்களம்
பச்சைஇரத்தமென
ஊதிக் கொளுத்தவர் போதும்கொளுத்திட
எங்கள் தமிழ் அழியும்
நீதிவகுத்திட நான் வருவேன் என
நெஞ்சை நிமிர்த்தியொரு
தூதுவன் வந்திடமுன்னே எமதுயிர்
தூரப் பறந்துவிடும்

கைகுகுலுக்கி எமைகட்டி யணைத்தவர்
கத்தியை எம்முதுகில்
பைய செலுத்திடப் பார்ப்பர் தருணமும்
பக்குவம் கொள்மனதில்
மெய்யைப் பூசிமேலே மின்ன வைத்து உள்ளே
பொய்யை மறைத்திடுவர்
வையம் முழுவதும் வஞ்சகப் புன்னகை
வைத்துக் குழிபறிப்பர்

ஒன்றுதிரண்டிடு ஒற்றுமையில் வழி
கண்டிடு இவ்வுலகில்
நன்று இது இல்லை என்று இருந்திடில்
நாடு அழிந்துவிடும்
வென்றுவிட நாமும் வீரமுடன் வரும்
தீதை எதிர்த்திடுவோம்
கொன்றுவிட வரும் தூதை மறுத்தொரு
யாகம் நடத்திடுவோம்

No comments:

Post a Comment