Monday, February 21, 2011

கரைகாணா ஓடங்கள்!

வானெழுந்த கோபுரங்கள் எங்கே?
வளையலற்ற பனைமரங்கள் எங்கே?
கானெழுந்தபேர் விருட்சம் எங்கே?
கருமை போக்க சூரியனுமெங்கே?
தானெழுந்த பேரலைகள் எங்கே?
தட்டியெழும் முரசங்களுமெங்கே?
மானமென்று ஆர்பரித்த வீரம்
மறமெடுத்த வீரபடை எங்கே?
மீனெழுந்த நீள்விழித்த மங்கை
மேனிதொட்ட வன்அழித்த தெங்கே?
ஏனெழுந்து நீசிதைத்த தெம்மை
ஈவிரக்கமின்றி சுற்றும முலகே!
தேனெழுந்த மழலை தானு மிங்கே
செய்தபாவம் என்ன சொல்லு நீயே?
மீனெழுந்து ஆடும் கடல்மேலே
மீள்தலின்றி ஓடும் படகானோம்
ஆனகையெடுத்த துடுப்பாகும்
ஆயுதங்கள் நீரில் விட்ட பின்னே
ஊனமுற்ற படகிலாடுகின்றோம்
ஓடிக் கரை சேரும்விதி அற்றோம்


ஊரைவிட்டு ஊனைவிட்டு எங்கள்
உயிரும் விட்டு நாமிருப்ப தேனோ
தாரைவார்த்து நாமிழக்க ஈழம்
தானெமக்கு தோள்வலித்தல் பொய்யோ
மோனமிட்டு நீகிடத்தல் விட்டு-
மூச்செடுத்து நீ எழுந்துவாடா
மானமிட்ட மங்கை வாழ்வு காக்க
மாதர்கை பிடித்த மன்னர் சேனை
ஊனமிட்டு ஓடவைத்து வென்றே
ஓசையின்றிப் பாய்படுக்க வைப்போம்
வானமெட்டி மீண்டும்புகழ் பாட
வாய்த்த தென்ன வழியுமொன்று பார்ப்போம்

No comments:

Post a Comment