Saturday, December 4, 2010

படையில்லாத ஊர் வேண்டும்!

இலைமீது தழுவி குளிரோடு இழைந்து
முகம்மீது படர்ந்தோடும் காற்றே - உன்னை
அலையாது நில்லு எனக்கூறி வேலி
தடைபோட்டு மறித்தாரும் இல்லை

கரைமீது மோதும் அலையாரே சொல்லீர்
கடல்மீது ஒருவேலி கட்டி
உருளாதே என்று ஒருநீதி கண்டு
தடுத்தாரும் எங்கணுமில்லை

மலைமீ தொழிந்து மறுநாளில் வந்து
உலகோட சுழன்றோடும் நிலவே
கருவானில் யாரும் கரம்நீட்டி உன்னை
சிறை போட்டு கொண்டதோ சொல்லு

ஒருபாவம் அறியா தமிழான என்னை
ஓடாதே என்று கால்கட்டி
பெருவேலி யிட்டு கடுங்காவல் செய்து
சிறையாக்கி வைத்ததேன் சொல்லு

விரிவானில் காற்றில் விரைந்தோடும் குருவி
எனவாகிப் பறந்தோட வேண்டும்
முகிலாகி வானில் மிகிழ்வோடு நீந்தும்
முழுதான சுதந்திரம் வேண்டும்

குழலூதி மலரில் குறுந்தேனை யுண்டு
புவிமிது உலவிடும் வண்டும்
கனிதேடி ஓடி மரந்தாவும் அணிலும்
காண்கின்ற அகிலமே வேண்டும்

ஒருநாடு வேண்டும் அதில்நாங்கள் மீண்டும்
குதித்தாடும் சுதந்திரம் வேண்டும்
தெருவீதி யெங்கும் செறிவான படைகள்
நிற்காத ஊரொன்று வேண்டும்

வயலோரம் சென்று கதிர்நீவி நின்று
பயமின்றி மகிழ்தாட வேண்டும்
இரவாகி வந்தும் எழிலான மங்கை
தனியாக அகம் திரும்பவேண்டும்

தருவார்கள் என்று தனிஈழ அரசு
அமைகின்ற திசைநோக்கி நின்றோம்
பெருவாழ்வு மீண்டும் வரும்ஆசை கொண்டு
விடியாதோ என் ஏங்கி நின்றோம்

உலைபோன அரிசி சோறாகி எங்கள்
இலைமீது விழுகின்ற வரையில்
உடலோடு ஒன்றாய் உயிர்சேர்ந்து நின்று
பிணமாகா விதிஒன்று வேண்டும்

No comments:

Post a Comment