Monday, May 23, 2011

சத்தியத்தீ எழும்!


    சத்தியத்தீ ஒன்று எழும்

நெஞ்சங்கனலாய் நினைவுகள் தீயாக
செந்தணல் பூத்தது தேசம் -ஒரு
கொஞ்சம் இழந்தோமா கொட்டிக்கொடுத்துமே
கூட்டிஅள்ளி உடல் எரித்தோம்.- கொடு
நஞ்சில்கருகியே நாலுதெருவிலே
நாதியற்றுக் கிடந்தோமே -இன்னும்
மிஞ்சுதே பாவங்கள் மீதியும் உண்டென
மேலும் சிறைகளில் வாசம்!

வஞ்சகர் நெஞ்சமும் வன்மை கொண்டானது
வாழ்வது தானென்ன பேயோ -ஒரு
வெஞ்சினம் கொள்ளவிளைத்தவர் நாமதோ
வீண்பழி கொண்டுழன் றோமே! -வெறும்
பஞ்சினைத் தீயெனப் பற்றியெரிந்தது
பாலகர் பெண்டிர்கள் தேகம்-வெறும்
பிஞ்சுகள் பூக்களைப் போட்டு உதிர்த்திட
பேயாய்  அவர் கொண்டதாகம்

காந்தி வழிதனில் வந்தவர் கண்டது
கத்தியும் ரத்தமும்தானே -மன
சாந்திகொண்டே, தலைவெட்டிக் குவிக்கையில்,
சத்தியம் தூங்கியதேனோ -அட
முந்திவந்தே இவர் முற்றுமழிக்கையில்
சிந்தை தமிழ் கொண்டுபாடும் -பெரும்
வேந்தே குறுநில வித்தகன் புத்தகம்
பற்றிக் கவி கொண்டதேனோ

ஊரே எரிகையில் ரோமாபுரிமன்னன்
கையில் பிடில்கொண்டு நின்றான் -ஈழ
தேசம் எரிகையில் செந்தமிழ் மன்னனும்
செம்மொழி பாடிக் களித்தான் -இங்கு
யாரும் இரங்கிட வில்லை அமைதியில்
சுற்றிச் சுழன்றது பூமி -அடி
வேருடன்வெட்டித் தமிழினம் கொன்றிட
விண்ணில் பரந்ததுஆவி

 பச்சை விசத்தினைப் பாலில் கலந்தவர்
பண்ணிய நீசத் துரோகம் -நல்ல
இச்சகம் சொல்லியே அத்தனை பேரது
நெஞ்சைக் கிழித்தது பாவம் -ஒரு
முச்சந்தி வீடதன் முன்னேகிணத்தடி
முள்ளிவாய்கால் படுகோரம் -இவர்
நச்சுப்புகையெழ வைத்த குண்டுஅள்ளிப்
பிச்சு எறிந்தன யாவும்

பட்டுடை கொண்டு பணத்தில் புரண்டொரு
பஞ்சணையில் தூங்க நீயும். இங்கு
வெட்டுடல் கொண்டுநாம் வீதியில் வீழ்ந்துமே
ரத்தம் குளித்திடலாமோ -ஒரு
சட்டமியற்றி பின் விட்டசிங் காசனம்
வீற்றிருக்க வழிதேடி நீயும்
கட்டை அடுக்கித் தமிழ்குலத்தைச் சிதை
வைத்து எரித்திடலாமோ?

கொட்டிய குண்டுகள் வீழ்ந்து வெடித்திட
கூடி எரிந்தன தேகம் -இன்னும்
கெட்டிதனமென வெட்டி ஒழித்திடப்
பட்ட துயரதும் பாவம் - இவர்
கொட்டிய கண்ணீரும் விட்டசபதமும்
தொட்டழிக்க பொங்கிப் பெண்கள் -அவர்
குட்டிகுழந்தைகள் சத்தமிட்ட பெருங்
கூக்குரலும் உனைக் கேட்கும்

சுட்டெரிக்கும் ஒரு சத்தியத்தீ பெருஞ்
சுடர் அனல்கொண்டு மூளும் -அது
மட்டும் நீதிஉண்மை விட்டு இருந்திடும்
கெட்டவிதி கொஞ்சம்துள்ளும் -எமை
வெட்டிக் கொலைசெய்ய விட்டவிதி மீண்டும்
வந்ததிசையில் திரும்பும் -ஒரு
கெட்டசமயம் அணைந்திடவே காலம்
கேள்வி கேட்டு உனை வெல்லும்
(காலில் விலங்கிட்டு தள்ளும்)

No comments:

Post a Comment