Wednesday, May 4, 2011

நானும் ஒரு அரசன் !

நேரே நிமிர்ந்து நடப்பேனடா ஆனால்
நெஞ்சமோ  கூனலடா
பாரே புகழ்ந்திட ஆகுமடா ஆயின்
பாதி மடையனடா
ஊரேமனம் கொண்டு வாழ்த்திடினும்
இவனுள்ளம் சிறுமையடா
வேரே கிடக்குது வாடி யிவனொரு
வேதனைத் தோழனடா

தோல்வி யெனக் கென்றும் சொந்தமடா வெற்றி
தோள்களில் பாரமடா
கால்கள் இறங்கையில் ஓடுதடா மலை
ஏறத் தயங்குதடா
ஆலமரமென நான் வளர்ந்தால் புயல்
ஆட்டும் பின் வீழ்த்துமடா
கோலமதில் நானும் நாணலடா இனி
கொஞ்சமும் வீழேனடா

வேலைகள் செய்திடச் சோம்பலடா நானோ
வீதிக்கு ராசாவடா
மாலைதனில் மது வண்டெனவே மதி
கெட்டொரு மந்தியடா
சேலைகள் பின்னே திரிவேனடா பல
சேட்டை புரிவேனடா
தோலை உரித்திட யாரும் வந்தால் பின்னே
தோப்புக் கரணமடா

கோவில்கள் வாசலில் பக்தனடா உள்ளே
கொள்கையில் நாத்திகன்டா
சேவைபுரிந்து வணங்கிடுவேன் தரும்
சாதம் வரைக்குமடா
நாவில் நற்கீத மிசைத்திடுவேன் அந்த
நல்லிசை ஞானம்கொண்டோன்
பாவினித்தோ குரல் தந்திடுவான் உதை
போடும் பொதி சுமப்போன்

நாளுமொரு போதும் பொய்யுரையேன் நானோ
நற்குண வேந்தனடா
ஏழுதனை இது எட்டு என்பேன் அது
எண்ணத்தின் மாற்றமடா
பாழுமுலக மெனைக்குறித்து இவன்
பைத்தியம் என்குதடா
ஊரை உலகேய்த்துப் பொய்சொன்னவன் மட்டும்
ஊருக்கு ராஜாவடா!

காதை அறுத்தவன், சங்கிலியைக் கொண்ட
கள்ளன் சிறையிலடா
மாதைக் கெடுத்தவன் மங்கை தீண்டஅந்தக்
மாயவன் உள்ளேயடா
தீதை இழைத் தில்லம் தீயிட் டெரித்தவன்
நீதியின் கையிலடா
ஈது அனைத்தையும் யாரொருவன் செய்தால்
நாட்டின் அரசானடா!

No comments:

Post a Comment