Tuesday, May 10, 2011

இருளா ஒளியா இனி வரும்..

தேனுலாவும் பூவின் இதழ்கள் தீயில் எரிகிறதே
தென்றல்மாறிக் கொன்றோர் மேனி தீண்டிக் கமழ்கிறதே
வானுலாவும் திங்கள் ஏனோ வாரா தொழிகிறதே
வையம் தன்னில் ஈழம்இருளில் வாழச்செய்வது மேன்

ஊனுலாவும் உயிரைக்கொல்ல ஓடித் தீதெழுதே
உண்மைவிட்டே ஓடிப்போக ஓங்கிப்பொய் யெழுந்தே
நானுலாவும் நல்லோர் தேசம் நலியச் செய்கிறதே
நடுவேவந்து நல்லோ ரல்லோர் நாட்டைக் கெடுத்தாரேன்

கண்கள் இரண்டும் காணச் சகியாக் காட்சிதெரிகிறதே
காலஞ் செய்யும் கோலம்எண்ணிக் கண்ணீர் சொரிகிறதே
பெண்கள், பிள்ளை, பெரியோர் உயிரும் பிரியக் காணுவதேன்?
பிறரும் அறியா ஊமை யுள்ளத் துயரம் ஆவதுமேன்

மண்ணிற் தமிழின் செம்மைகூடி மாலைக் கதிரவனும்
மறையும்போது பெருகும் மருளல் மனதுள் எழுகிறதே
எண்ணம் மயங்க இயற்கையன்னை யிவளின்பாசம் போய்
எட்டாக்கனியாய் எங்கள்தேசம் இரத்தம் சொரிகிறதே

விண்ணிற் கோலம் வெடிக்கும் பாறை விரிந்த பிரபஞ்சம்
விளைந்ததெல்லாம் வீணோ? வாழ்வும் விரயம் ஆகிறதே
தண்ணீர் வானம் தரைகள் உண்டு தமிழர் வாழ்வொன்றே
தாவும் அலையிற் படகென்றாகித் தவிக்கும்நிலையாமேன்?

சோரும் காலும் சொல்லும்மனமும் செல்லும் பாதையதில்
சீரும் வாழ்வுக் கொளியின் புள்ளி சற்றே தெரிகிறதே
யாரும் எம்மைக் காத்தல் எண்ணிக் கைகள் தருவாரோ
நாமும் வாழ்ந்து நலமும்காண வழிகள் எழுமாமே

நாலும் எண்ணி நாமென்கண்டோம் நல்லோர் தூங்கையிலே
நாகம் தேளும் நச்சுப் பாம்பும் நாட்டை ஆள்கிறதே;
காலும்பாதைக் கல்லில்முள்ளில் கண்டே இடிபட்டு
கதறிக்கேட்டும் காவல் தெய்வம் கைகள் விரிப்பதுஏன்?

No comments:

Post a Comment