Wednesday, May 4, 2011

மேற்குச் சூரியன்

இகமே வந்து புகுமே ஈழம், தகுமோ போரும் என்றே
அகமே வஞ்சம் கொளுமே ஆயின் முகமே மகிழ்வைத் தரவே
நகமே கொள்ளும் சதையே போலே நீயும் நானும் என்றே
சகமே வந்து உறவே கொண்டு சதியே செய்து கொல்லுமே

வருமே துன்பம் தருமே எனவே அறியா திருமே எனவே
உருவே ஒளியின் பெருவேந் தன்கை தருமோர் உறவைகண்டே
கருமை மனதோ டருகே வந்தோர் அருமை அன்பை விட்டே
எருமை ஏறும் யமனாய் ஈழம் கருகக் கொல்லும் விதியே !

எவரோ வந்தார் கரமே தந்தார் இனிதே கனிவாய் மொழியால்
தவறே கொல்லல் தலைவா என்றார் தமிழன் வலிமை கண்டார்
இவரோ உதடில் நகையும் உள்ளத் துறையும் நஞ்சும் கொண்டே
கவரும் பேச்சில் கனிந்தே அள்ளிக் கனலைக் கொட்டிக் கொன்றார்

அருளே கொண்டார் அயலே வாழும் அருமை திருமால் சயனம்
பெருமோ ருயிராய் அமுதம் கடையப் பிறந்தோர் விதியாய் வந்தே
கருவாய் உள்ளோர் கட்டிய ணைப்போர் கன்னி காப்போர் அன்னை
தருவாய் பெரிதாய் திடமும் கொண்டோர் எரிவாய் ஊட்டி மகிழ்ந்தார்

இனமே கொன்று மனதே மகிழ வனமே வாழும் மிருகத்
தனமே கொண்டே பகைவர் வந்தால் சினமே கொள்ளா அற்பத்
தனமாய் உயிரை கொள்நீ யென்று தமிழர் தானும் நில்லாக்
கனலாய் தீயும் நெஞ்சில் கொண்டு களமே புகுந்தார் தவறோ?

பொருளே கொள்ளும் நினைவே கொண்டு போடும் முதலில் உணவும்
இருளே சூழும் போதே திருடக் கொலையும் செய்யும் கயவன்
அரிதே அதுபோல் தருணம் கண்டு அழியத் தமிழர் கொன்றார்
சரியோ தருமம் தலையும் கவிழச் சற்றேன் கண்ணும் அயர்ந்தாய்

பெரிதோர் நிலைமை மாறும் பாராய் பேசும் அறமும் வெல்லும்
அரிதோர் உயர்வும் ஆகும் ஈழம் அடையும் துயரும் செல்லும்
விரிதோ ருலகில் வெளிச்சம் காணும் விடியல் இல்லைத் தூரம்
தெரிதே பாராய் உதிக்கு மொளியின் தோற்றம் மேற்கின் ஓரம்

No comments:

Post a Comment