Sunday, May 8, 2011

கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் ( நீள் கவிதை)

1.பெண்ணின் சோகம்!

பட்ட மரம்ஒன்று பாதிக்கிளை தானுடைந்து
கட்டியவன் மாளக் களையிழந்த மாதொருத்தி
பொட்டின்றி பூவின்றி புன்னகைக்கும் இதழின்றி
நிற்பதுபோல் நெடிதுயர்ந்து நிற்கஅதன் பக்கத்தே

சுட்டெரிக்கும் சுடலை  சூழலதை அச்சமிடும்
நட்டதொருபேயாய்  நெடுமரமும் நின்றிருக்க
சட்டென்று பீதியெழச் செய்வதென ஆகுமரக்
கெட்டழிந்த கிளைநோக்கி கிளிஒன்று வந்ததுவாம்

வட்டவெயில்தான்மறையும் வானச்சிவப்புநிறம்
கொட்டியதோர் குங்குமமோ குடல்கிழித்த உதிரமதோ
வெட்கமுற்ற கன்னியவள் விளைகன்னசெஞ்சிவப்போ
திட்டமிட்டு இனமழிக்கும் தமிழீழப் பூமியதோ

என்னும் வகைதெரியா இயற்புற்ற மாலையிலே
சின்னக் கிளைநோக்கி சேர்ந்ததாம் பசுங்கிளியும்
தன்னை இருத்தியதன் தலைதிருப்ப மறுகிளையில்
கன்னங்கருவண்ண குயிலொன்று தனியிருந்து

வீசுமெழிற் காற்றினிலே வீணையெனும் குரலழிய்
மாசுடைய காதலெண்ணி மனம்விட்டுபாட்டிசைக்க
நேசமுடன் தானிருந்து நெஞ்சம் உருகிவரும்
பாசம் இழந்தகுயிற் பாட்டைக்கிளி கேட்டதடா

(குயில் பாடுகிறது)

”வாச மலரெனவே வாழ்க்கையிலே நானிருந்தேன்
பேசி எனைமயக்கி பேதைமனம் கொண்டவரே
ஆசைமுடிந்ததுவோ அன்புமனம் விட்டதுவோ
தேசம்கடந்துமேநீர் திசைகாணாச் சென்றதென்ன

பூவை எறிந்தனைஏன்? புயலடித்துவீழ்ந்தனனே
சாவை அணைத்துவிடும் சஞ்சலமும் கொண்டேனே
தேவை முடிந்தவுடன் தேடவிட்டுப் போனவரே
பாவை இவளொருத்தி பாடுதுயர் கேளாயோ

பேதை உனைநம்பிப் பெண்மைதனை ஈந்தேனே
போதை முடிந்தவுடன் போன இடம் கூறாயோ?
பாதை மறந்து எனைப் பார்க்க மனம் கூடலையோ
மாதைபிரிந்ததென்ன? மாறிமனம்வந்திலைலேல்

நாவை அறுதெறிந்து நான்சாக மாட்டேனோ?
நோவை எடுத்த உடல் நஞ்சாகி மாளாதோ?
காவிஉடல் எடுத்து கட்டையில போட்டெவரும்
மேவித் தீ மூட்டாரோ? மின்னல்வந்து வீழாதோ?

காதல் கனிந்ததென கற்பனையில் நானிருக்க
போதல் இனிதெனவே போனவரே எங்கு சென்றீர்
மோதல் இருந்திடலாம் மோகம் கலைந்திடலாம்
கூதல் கலைத்துஎன்னை கூடியபின் பிரிவதுவோ"

பக்கமிருந்தழுது பாடுங்குயில் பார்த்துமன
துக்கமெடுத்தே, தன் தோல்விதனை எண்ணிக்குரல்
விக்கித்திணறிஒரு வேதனையில் தான்துடித்து
சிக்கித் திரிந்தகுயில் சொல்லுமொழி தான்கேட்டு

திக்கற் றபேடுதனை திரும்பி மனதிரங்கி,
”மிக்க துயரெடுத்து மேதினியில் வாழ்பவளே
எக்கதியு மில்லையென இளைத்து அழுபவளே
ஏக்கம் எடுத்தகதை ஏதெனவே சொல்லாயோ?”

2. துயரின்முடிவு!

மாலை யிருள்மயக்கம் மாந்தர்வயல் தோட்டமதில்
வேலை முடித்தலைந்து வீடேகும் காட்சியுடன்
தோலை எலும்புந்தத் தோன்றும் சிலமாடுகளும்
காலை எடுத்தபசி கண்டபுல்லோ போதாமல்

நொண்டி நடந்தசைய, நோயெடுத்தோர் முதியவரும்
வண்டியி ருந்தபடி வாய்திறந்து தானிருமி
தொண்டை கனைத்தவொரு தோற்றமதும் கண்டேயக்
கெண்டை மீன் நீர்வெளியே கிடந்து துடித்ததென

வெண்ணை என உருகி வேதனையை கொட்டியதாய்,
கண்ணின் துளி உதிர்த்த கருங்குயிலோ கூறியது
”பெண்ணின் நலமறியாப் பித்தர்கள் வாழும்வரை
மண்ணில் கரைவதுவோ மாதர்விழி நீராகும்

அன்னைதிருவயிற்றில் அழகுமணிக் கருவுயிர்த்து
பின்னர் உதிக்கையிலே பிறந்தவொரு அழுகையவர்
கன்னதிருந் தொழிந்து காய்வதுதான் எப்போது?
சின்னக் குழந்தையெனில் சீராட்டிப் பாட்டிசைப்பர்

கன்னி வயதென்றால் கதைநூறு பேசிடுவார்
பின்னைவீட்டிலிவள் பேசியது பார்த்ததென்பர்
கன்னத்தொரு முத்தம் கண்டதெனப் பொய்யுரைப்பர்
சின்ன மனதெடுத்து சேதிபல கூறிடுவர்

உண்மைக் காதலுடன் ஒருவன்தனை நேசிப்பின்
பெண்மைச் சுகமறிந்து பேசாமல் போயிடுவான்
மண்ணில் எறிந்ததொரு மாதுளையின் முத்தெனவே
கண்ணீர் சுரப்பதன்றி காப்பதற்கு யாருமில்லை

எண்ணத் திருத்திமன துள்ளே குமுறியொரு
கிண்ணப்பசும்பாலில் கொட்டியதோர் துளிவிசமாய்
உண்ணவும் முடியா உமிழ்ந்திடவும் மாட்டாது
மண்ணில் கிடந்துழலும் மங்கையரில் ஒன்றானேன்

என்றிடப் பைங்கிளியோ இன்னலே இல்லாத
ஒன்றில்லை வாழ்வில் உரைதிட நீகேளாய்
தென்றல் புயலாகும் திரைகடலும் பொங்கிவரும்
கொன்றை மலர்தானும் கொழுந்துவிட்டுத் தீஎரியும்

பெண்ணே உலகமதில் பெருஞ்சக்தி கொண்டவளாம்
கண்ணீர்க் கிரையாகி காலமெலாம் துஞ்சுகிறாள்
எண்ணி வெகுண்டெழுந்தால் எரியும்,ஒருமதுரையென
கண்ணை விழிக்க ஒரு காற்றும் புயலாய் தோன்றும்

மாவுலகு சுற்றும்விசை மேலெழுந்த சூரியனாம்
காவுமிந்த அண்டவெளி காற்றில்லா சூனியமும்
ஏவி ஒரு சக்தியதன் இழுவைக்கு ஆடுதெனில்
தூவிநிலம் வீழ்சக்தி தோற்றங்களே பெண்ணவர்கள்

பெண்ணில் மறைந்துள்ள பெரும்சக்தி தானெழவே
அண்டம்சிலுசிலுத்து ஆகாயம் ஒடியாதோ
விண்ணில் சுழலுபவை விசையெடுத்துஓடாதோ
அன்னைசக்தியவள் அருங்குழந்தை நீவிர்காள்

என்றாலும் இன்னல்தனை இதயத் தடக்கியொரு
மென்மை கொழித்தவராய் மௌனஉருவெடுத்து
புன்னகை கொண்டேநற் பொறுமைதனைக் காத்திடுவீர்
மண்ணில் பெருவாழ்வும் மகிமையும் பொங்கி வரும்

சொல்லிச் சிறுகிளியும் சிறகடித்து வான்பறக்க
மெல்லத்திரும்பிதன் மீளாத் துயரடக்கி
கல்லாய் மனதெடுத்து கண்ணை துடைத்தகுயில்
இல்லத் திசைநோக்கி எழுந்து பறந்ததுவே !

No comments:

Post a Comment