Thursday, May 19, 2011

கடவுளின் கருணை இதுவா?

அழவென்றே ஓரினம் செய்தான்- அதை
அகிலத்தில் ஒருபக்கம் வாழென்று வைத்தான்
விழவென்று உடல் செய்து விட்டான் -அதில்
விலையற்ற உயிரையும் நிலைகொள்ளச் செய்தான்
குளமென்று வழிந்தோட செந்நீர்- அதை
கொட்டவே  செய்யென்று குணமாந்தர் செய்தான்
களவும்பொய் மொழிபேசி உலகை -அவன்
காலமெல்லாம் நன்கு ஏமாற்ற வைத்தான்

குலையாக கொத்தாக வெட்டி - இவர்
கொல்லென்று கோடரி கத்தியும் ஈந்தான்
சிலையென்று உலகோரைக்கண்டு -அவர்
சிந்தை மகிழ்ந்திட சாந்தமும் செய்தான்
நிலையென்ன இவர்வாழும் மண்ணில் -எவர்
நிமிர்ந்தாலும் உயர்ந்தாலும் நெஞ்சைக்கிழித்து
கொலை யொன்றா கண்முன்னே செய்தார்- உடல்
கொட்டிக் குவித்துமே வெட்டிக் களித்தார்

மலைபோல இவர், மக்கள் மாள -நல்
மறைவில் நின்று காட்சி படமாக்கி வைத்து
கலையென்று கண்நோக்கி நின்றார் - கண்டு
கலங்கிட வேயில்லை அதிசயம் என்றார்
தலை போன உடலோடு தாயை -அன்புத்
தங்கை பெண்மேனியை தரைபோட் டுதைத்து
இலையென்ற கோரமும் செய்து அவர்
இன்பமடைந்திடச் சற்றும் நாணாது

கரம் மீந்து கையும் குலுக்கி - அவர்
காதிலோர் ரகசியம் கனிவுடன் பேசி
வரம் ஈந்து வாழெனச் செய்யும் - இந்த
வையகமா ஏழை வாழ்ந்திடவைக்கும்
கொலை தானும்,கண்டவர் அன்றும்,- இன்றும்
கொஞ்சமும் நெஞ்சமி ரங்கிடக் காணோம்
கலைவிழா கண்காட்சியாமோ - இது
கண்கள் வியந்திட களியாட்ட விழாவோ

உள்ளத்தில் உரம்கொண்டே கேளாய் இந்த
உலகத்தின் மறுபக்கம் இருளென் றுணர்வாய்
அழுதாலும் நீரென்ப தோடி  - அது
அசையாத கல்லையும் அசைக்குமிப் பாரில்
பொழுதான போகமுன் மக்கள்  - நல்
லுயிரோடு வாழ்ந்திட எது வின்னும்வேண்டும்
முழுதாக இனம்போகமுன்னே -  பல
முள்ள இதயங்கள் உருக்கிடவேண்டும்!

No comments:

Post a Comment