Saturday, May 21, 2011

என்ன உலகமடா..!

கத்தும்கடலே பெருகிவிடு, கயவர் கூட்டம் அழித்துவிடு
செத்தும் காணச் சிறுமையரை தீயே பற்றி எரித்துவிடு
வித்தும் முளையும் பூவென்று வெறியர் கிள்ளி எறிகின்றார்
கொத்தும் மலராய் மேனிகளைக் கோரம் வெட்டிக் கொல்கின்றார்

சட்டம் போட்டு விதியெழுதி சரமாய்வார்த்தை தான் கோர்த்து
முட்டிமோதி விளையாடி மெல்லச் சுற்றுது பூவுலகு
வெட்டிபோடும் கைகளினை வேடிக் கையாய் விழிகண்டு
சுட்டுகொல்வோர் தோள்களினை தொட்டே தோழமை பேசுகிறார்

ஒற்றைக் கையை மேலோங்கி ஒன்றுமில்லை பாரென்று
மற்றக் கையில் வாள்தூக்கி மறைவில் எங்கள் மெய்கிழிக்க
பற்றுக் கொண்டு பார் என்று பாவிஉலகம் ஏமாற்றி
வெற்று கையை இரண்டாக்க விம்பம் வைத்துக்காட்டுதடா

வைத்துக் கட்டும் சொல்லாக வார்த்தை இரட்டை விதமாக்கி
மெத்தப்புழுகும் செயல்கண்டு மேனிதுடிக்கக் காண்கின்றேன்
சொத்தும்சுகமும் இதோஎன்றால் சுழலும் வேகக் காற்றாடி
வைத்துகொள்ளும் வேகத்தில் வானத்தேறி சுற்றுகிறார்

வெட்டிப் போடப் படமாக்கி வியந்து பார்த்த உலகமது
தொட்டில் இருந்து சுடுகாடு செல்லும்வயது மாந்தர்களைக்
கட்டிக் கொல்லும் காட்சியதை காட்டக் கண்டும் உலகமது
சட்டை செய்யாக் கண்களினை சாட்சி கருதி மூடுவதேன்

உள்நாட்டுள்ளே பேசிடுவோம் ஒருவர்வேண்டா என்கின்ற
கள்ளன் தானும் காட்சிக்காய் கடவுள்வேடம் போட்டுவர
துள்ளிக்காலில் வீழ்ந்தெம்மை சிவனே என்று கும்பிட்டு
கொள்ளிப்பேய்க்கு வாழ்வாகி கூடப்போ நீ என்கின்றார்

சொல்லும் வரையில் இராமகதை சொல்லக்கேட்டு காலையிலே
நல்லாள்சீதைக்(கு) அண்ணன்தான் ராமன் இலங்கா ஆளுகையில்
பொல்லாக் குணத்தோன் இராவணனும் உள்ளேவந்து போர்செய்தான்
கொல்லு என்றே கூத்தாடும் கூட்டம் கொண்டது உலகமடா

செல்லு வீதி ராஜமனை சிறந்த இவர்கள் அரசாங்க
கல்லுமனைகள் முன்னாலே கைகள்கோர்த்து கதறியழு
நில்லு நீதி கேட்டெழுந்து நேரே கண்முன் முகம்பார்த்து
சொல்லு, நீதி தாவென்றே சுற்றும் உலகைப் புரட்டியெடு

No comments:

Post a Comment