Tuesday, January 25, 2011

வாழப் பிடிக்கல்லை..!

       நேற்று இன்று நாளை

நேற்று)
வாழப் பிடிக்கலைடா -தம்பி வாழப் பிடிக்கலைடா -இந்த
வையகம் தன்னிலே வந்து இருந்துமே வாழப் பிடிக்கலைடா
ஆழத் திரைக்கடலில் -ஆடும் அலைகள் போலவடா -தினம்
ஆடி யலைந்தொரு வாழ்வில் கலங்கிடும் வேதனைபோதுமடா

ஏழையெனப் பிறந்தோம் -பிறந்தே எத்தனை வீழ்ச்சி கண்டோம் -ஒரு
வாழைக்கனித் தோலில் வைத்தபாதமென வாழ்விற் தினம்விழுந்தோம்
கோழை எனப்படுத்தா -நாமும் கொண்ட இனமழிந்தோம் - இல்லை
வாளைச் சுழற்றியே வீரமுடன் வெகுதூரம் நடந்து சென்றோம்

தோளை மறைத்து நின்றா -நாங்கள் தோல்விதனைச் சுமந்தோம்- பல
காளையும் கன்னியர் போரைநடத்தியே வீரக்கதை படைத்தோம்
கூழைத் தனமெடுத்தா -படையோ தோற்ற கதைகளெல்லாம் ஒரு
ஆளைக் கலக்கிடும் சூரத்தனத்தினில் அத்தனையும் தகர்த்தோம்

ஆழ மனத்தினிலே -நாமும் அத்தனை வீரம் கொண்டும் - அட
கேளு தம்பி நாங்க நேர்மை நீதிதனைக் கொண்டே உடன்நடந்தோம்
ஊழையிடும் நரிகள் -பலவும்  ஓடிஅருகில் வந்தே - தம
துள்ளமதில் வஞ்சங் கொண்டு அழித்திட உண்மை சிதைந்ததடா

நேசமுட னிருந்தே -கைகள் நீட்டிக் குலுக்கியவர் -மனம்
கூசப் பெருங்கொடு வாளை உருவியே குத்தியதே னறியோம்
ஆழநடு நிசியில் -சுற்றி ஆயிரம் பேரெழுந்து - உயிர்
வாழத் துடித்தவர் வாழ்வைஅழித்திடப் போரை எடுத்ததென்ன

சத்தியம் சொன்னவரும் -எம்மைச் சார்ந்தவர் தம்பிகளும் -பல
உத்தமரும் வெகுமுன்னத மானவர் ஒற்றுமை கண்டவரும்
கத்தி எடுத்ததென்ன  -பகைவன் கட்சியில் சேர்ந்தென்ன - வருங்
கத்தைபணத்துக்கு ரத்த உறவுகள் காட்டிக் கொடுத்ததென்ன

(இன்று)
வாளைப் பிடிக்கலைடா -தம்பி வாளைப் பிடிக்கலைடா -இன்று
வாரி இறைத்துயிர் போகப் பெரும்போரை நாங்க நடத்தலைடா
ஆழி கடல்கடந்து -எங்கள் நாடுகடந்ததொரு - தமிழ்
ஈழப் பெருமரசானது கண்டொரு வீரநடையெடுத்தோம்

சூடான் அழைத்தெனில் -இனியோ சுற்றும் உலகமெல்லாம் அட
கூட வரும் எங்கள் கூக்குரல் கேட்டுமே கொஞ்சமிரக்கமிடும்
வாடா உடன் நடப்போம் -சேர்ந்து வாழும் வழியமைப்போம்- இனம்
தேடும் விடிவது தெய்வம்தருமென ஓடியே பின்நடப்போம்

தேடி எடுத்திடடா -எம்தமி ழீழக் கொடிபிடிடா -அது
ஆடியசைந்தது வீசிடும்காற்றினில் கூவிப் பறக்கட்டுமே
ஓடி நடந்திடடா -அந்த ஊரைக் கெடுத்தவர்கள் -தந்த
கூடி நடமுதுகொடு குத்துஎன கொண்டதைக் கைவிடடா

நாளை (நடக்கும்)
வாய்மையே வென்றதடா -எங்கள் வாழ்வு செழித்ததடா -இனிப்
போயினதுன்பங்கள் பொன்னென ஈழமும்பூத்தது பார்த்திடடா
தூய்மை திரும்புதடா -எங்கள் துன்பம் விடிந்ததடா -தனித்
தாயகம் தன்னிலே ஈழத்தமிழர சானது வந்ததடா

நாடு கடந்தரசு -நம்ம நாட்டினுள் வந்ததடா -இவர்
தேடும் சுதந்திரம் தென்றலென வீசித் தேகம் வருடுதடா
காடுமலைக ளெல்லாம் -துன்பங் கண்ட தமிழினமோ -இன்று
வீடு விடுதலை வாழ்வெனப் பாடிடும் வேளை பிறந்ததடா

No comments:

Post a Comment