Thursday, January 6, 2011

எல்லாம் உணர்ந்தவன்

வாழ்வினில் ஆயிரம் வந்ததைக் கண்டவன்
வாட்டம் எனக்கில்லை ஞானப்பெண்ணே!
தாழ்விலும் ஏற்றமும் தன்னில் திளைத்தவன்
தாங்கும்உரமுண்டு ஞானப்பெண்ணே!
மூழ்கி எழுந்தவன் மூச்சுப் பிடித்துமே
முற்றும் கடந்தவன் ஞானப்பெண்ணே!
வீழ்வில்லை இன்னுமும் வீறுகொண்டே பாரில்
வெல்லத் திடமுண்டு ஞானப்பெண்ணே!

யாவும் உணர்ந்தவன் ஞாலம் அறிந்தவன்
நானே ஓர் ஞானியாம் ஞானப்பெண்ணே!
தாவும் இளம்தென்றல் தன்னில் புயலையும்
தாங்குமிடி கண்டான் ஞானப்பெண்ணே!
ஏவும் இயற்கையின் ஓடுமுகில் வந்து
என்ன மறைக்கினும் ஞானப்பெண்ணே!
மேவும் முகில் உள்ளே மெல்ல ஒளிர்நிலா
மீண்டும் வெளிவரும் ஞானப் பெண்ணே!

கொட்டும் மழைவரும் கூவி இடித்திடும்
சட்டச்சட பெரும் சத்தமெல்லாம்
விட்டுவிடும் ஒருவேளை அமைதியின்
வேகம் பிறந்திடும் ஞானப்பெண்ணே!
வட்டமுகம்வாடி வாழ்வது விட்டுநீ
வண்ணம் எடுத்தெழில் சோலையிலே,
சிட்டுகுருவியென் றோடிப் பறந்திடு
சிந்தை அமைதிகொள் ஞானப் பெண்ணே!

வெள்ளி நிலவினில் கையில முதுடன்
வெண்ணிலவு கண்டு உண்டதெல்லாம்
அள்ளி அணைத்திடும் அன்னை அருள்தானும்
இன்னும் வருமோடி ஞானபெண்ணே!
பள்ளி அனுப்பிய தந்தையின் பாசமும்
பார்த்து முகம் தன்னில் நீர் வழிந்தால்
துள்ளித் துடித்திடும் பாசமெல் லாமொரு
தோற்றமடி மீண்டும் சேர்வதில்லை

என்றுமே வாழ்வில் நிலைப்பதில்லை இருள்
ஓடும் ஒளிவரும் ஞானப்பெண்ணே!
நன்றும் பெருந்தீமை நல்லதும் கெட்டதும்
நாளும் தினம்மாறும் ஞானப்பெண்ணே!
குன்றும் குழிகளும் கோடி உண்டு இது
கொண்டது வாழ்வடி ஞானப் பெண்ணே!
வென்று புகழொடு வாழ நினைத்திடு!
வெய்யவனாய் ஒளிர் ஞானப்பெண்ணே!

No comments:

Post a Comment