Thursday, January 20, 2011

கடலிலாடும் அலைகள் நாம்!


வாழ்க்கையெனும் கடலினிலே வண்ணத்துப் பெண்ணே -நாம்
  வட்ட அலை போல் எழுந்தே ஆடுகின்றோமே
தாழ்ந்திடுவோம் உயர்ந்திடுவோம் தாவிடுவோமே அலை
   தரையை நோக்கி ஓடுவதாய் ஓடுகின்றோமே

வினைகளாலே வீழ்ந்தெழுவோம் கண்களில் நீரே -நாம்
 விரைந்து செல்லல் விதியென் காற்றின் கைகளிற்தானே
மனைவி கணவன் மக்கள் எல்லாம் கடலிலே பெண்ணே -எம்
மனதுகொண்ட பாசமெனும் அலைகளின் வீச்சே

ஒருவரோடு  ஒருவர்கொள்ளும் உறவுகளெல்லாம் கடல்
 ஓடிவரும் அலைகள் காணும் உரசல்கள் கண்ணே
பெரிதுஆக எழுந்திடுவோம் மறுகணமெங்கே -உயர்
  பேரலையும் வீழ்ந்துவிடும் பாரடிபெண்ணே

வறுமை சோகம் வருத்தம் எல்லாம் இதயத்தில் கண்ணே -அலை
  வந்துசொல்ல யாருளரயல்  வருவதும் அலையே
வெறுமையிலே கதறுவது விதியடி அலையே நாம்
  வேண்டுவதோ அமைதியென்னும் பொய்கையின்நிலையே

ஒருவர்முன்னே ஒருவர் பின்னே ஒடுகிறோமே -நாம்
  ஒருவரோடு ஒருவர்கூட ஆசைகொண்டோமே
வருவதில்லை தருணமிங்கு வாழ்க்கையில் கண்ணே நம் 
வாழ்வில் கொண்ட கற்பனைகள் கனவுகள்தானே

ஓடும்வரை ஓடிடுவோம் உரிமையில் அன்பே கொண்டு
  ஓசையிடும் ஆர்ப்பரிக்கும் உணர்வுகள் வென்றே
வாடுவதும் தேடுவதும் ஆகட்டும் பெண்ணே - நான்
  வந்துவிட்டேன் தரை எனக்கு தெரியுது பெண்ணே

கரைநெருங்க அலையின் மனம் ஞானிகள் போலே- உண்மை
 கண்டதெனத் தெளிவுகொள்ளும் அமைதியாகுமே
தரையறியா அலைகளோடு துள்ளிடுபெண்ணே நின்
 தவிப்பில் மனம் குளுமை கொள்ளும்இயற்கையாகுமே

No comments:

Post a Comment