Monday, January 31, 2011

தை பிறந்தது, வழி பிறந்ததா ?

(தை பிறந்தது, எமக்கு வழிபிறந்ததா? என்னும் ஓர் கவியரங்கத்துக்கு எழுதியது)

ஓடும் குளிர்காற்றும் ஓங்கியநற் பெருமரமும்
ஓரத்தே நின்றசைய
கூடும் பசும்வயலை குலவிடவே தூரத்தில்
குனிந்துமே தொடுவானமும்
பாடும் குயில் பறவை பசுங்கிளிகள் பற்பலவும்
படபடத்து ஒடியலையும்
நாடும் நலம்வீடும் பேணும் உழவர்தமின்
நாணுகதிர் சேர்ந்தவயலில்

ஓடியறுத்தகதிர் ஓரம் அடுக்கிவெயில்
உடல்கருக்க வேர்வை தெளித்து
பாடிக் களித்துவரும் பலம்கொண்ட காற்றுக்குப்
பதர்நீக்கிப் பயனும்பெற்று
வாடியவர் குடிசெழிக்க வயலீந்த பெருங்கொடையால்
வாசலிலும் கோலமிட்டு
தேடியவோர் நிதிஎண்ணி தெய்வம் எனக்கதிரோன்
திசை நோக்கித் தொழுதுநிற்பர்

நாடு செழிக்கவெனில் வயல்`வரம்புயர`வென
நறுக்கான வார்த்தைகூறி
பாடும் பெரும்புலவர் பாட்டிஎம தவ்வையவள்
பதங்கூறுஞ்சொல் கேளீரேல்
தேடும் நிதியனைத்தும் தோற்றுவது கழனி,கறித்
தோட்டமெனப் பொருளேயாகும்
ஓடும் முகில் மறைந்து உள்ளமகிழ் ஆதவனே
உயிருக்கு உணவீந்ததை

தைபிறந்தால் வழிபிறக்கும் தமிழன்வாழ் வேற்றமுறும்
தழைத்தோங்கு மென்றேகூறி
மெய்யுரைத்த நாளெல்லாம் மேதினியில் போனதய்யா
மீளாத வெள்ளம் வந்து
செய்கழனி நெல்லழித்து சிதைத்தவரின் இல்லத்தே
சென்றுதான் இடம்பிடித்து
கொய்துதலை கொண்டாடும் குடியழித்த அரசுக்கு
கூலிக்குநிற்குதப்பா

தைபிறந்தால்குடியழிக்கும் தமிழீழத்திருநாட்டில்
தவிக்கவிடும் என்பதைப்போல்
கையழிந்து கைகொண்ட காசிழந்து பொருள்நீங்க
கால்நடைகள்தானுமிழந்து
தாயழுது சேயழுது தரம்கெட்டு எழுந்தோடி
தண்ணீரில் உடல் விறைத்து
பேய்களுதும் வாழ்வைவிட பேதலித்தவாழ்வுகொள்ளப்
பிறந்தவரோநாம் ஈழத்தவர்

கொய்துதலை குவித்தெண்ணிக் கொண்டாடும் சிங்கத்தின்
கொடிகொண்ட அரசுதானும்
எய்தவென எல்லாமும் உவந்தளித்து நலமவாழ
செய்தவனோ இறைவன் என்னில்
பெய்தமழை உருண்டோடிப் பேசாமல் கடல் செல்லச்
செய்வதனை விட்டே எம்மை
உய்த நிலை காண்பதுவும் பொறுக்காது எழஎழவே
வீழ்த்துவதாய் வினைகள் செய்தான்

தைபிறந்தால் குழிபறிக்கும் தலைபோகுமென்றிருகக்
தைபொங்கல் யாருக்கய்யா
பெய்யுமழை உணவழிக்க உயிரெடுக்க இடம்நகர்த்த
நன்றி சொல்வ தெவருக்கய்யா
செய்தவயல் எமக்கில்லை உள்ளவயல் வெள்ளமென
இயற்கையே கொள்ளிவைக்க
கைகுலுக்கி வாழ்த்தெழுதி களித்திடவும் எங்களுக்கு
தை இன்னும் பிறக்கவில்லை

சூரியனைக்காணாது சூழுமிருள் காலமதில்
சூடேறும் வானைநோக்கி
ஏறுவனோ கதிரோனென் றேங்கிகிடக்கின்றோம்
எரியட்டும் எங்கள்சோதி
வீறுடனே விடுதலையும் வெற்றியதும் கிட்டட்டும்
வீடெல்லாம்பொங்கல்பொங்கி
கூறிடுவோம் அப்போதே தை பிறந்து வழிபிறந்த
தழைத்தோங்கும் வாழ்வும்வரும்

மாறிடுவோம் மாற்றிடுவோம் மாகவியின் கூற்றெடுத்து
மாவுலகில் ஒருவனுக்கு
சோறுதான் இல்லையெனில் சுற்றும் புவி நிறுத்திச்
சொல்லென்று கேளாயினும்
வேறுஅவர் என்றில்லா வீரத் தமிழுறவு
விடியாமல் அலைந்துசாக
ஏறுவது கீழ்த்திசையில் எங்கள் இரவியல்ல
இது எங்கள் தையுமல்ல

தைபிறந்து வழிபிறக்கும் வார்த்தையது உண்மையெனில்
வந்ததிது தையுமல்ல
வெய்யவனும் கீழ்த்திசையில் வேகமுடனேறிவரின்
விடிந்திருக்கும் விடிவுமல்ல
தெய்வமெனும் தமிழ்பொங்கி திசையெல்லாம் முழக்கமிடும்
தேன்தமிழின் பொங்கலல்ல
செய்வதென் விடியலதன் திசைநோக்கி நடைகொள்வோம்
தோன்றட்டும் முதலில் விடிவு

1 comment:

  1. அழகான வார்த்தைகள் கொண்ட மிக அருமையான கவிதை இது... வாழ்த்துக்கள்!

    ReplyDelete