Tuesday, January 11, 2011

பிரிவின் சோகம்!

(மணம் முடித்து கொடுத்ததும் மகளின் பிரிவால் வாடும் தந்தை)

தென்றல் அருகினில் ஓடி வந்து என்னை
தீண்டி உரைத்ததும் என்ன? - அவள்
நின்ற திசைதனில் நேரிருந்து கண்ட
நேசக்கதைகளைச் சொல்ல - சிறு
கன்றென ஏதும் பயமறியா துள்ளி
கன்னிஅவள் கொண்ட சின்ன - உளம்
இன்று என்னபடும் பாடென எண்ணியே
ஏங்கும் தந்தைமனம் தேற்ற!

வந்து தழுவிய வாசமலர் மணம்
வாடும் எனதுடல் நீவி - இன்பம்
தந்து விலகியபோது அவள் எண்ணம்
தாவி எழுந்தது மீள - உயர்
சந்தனமாய் இல்லம் எங்கும் மணத்தவள்
சிந்துகவியெனச் சொல்லும் - குரல்
விந்தையின்று வெறும் வெட்டவெளியென
வேடிக்கையானது கொல்ல!

கைவிரல் பற்றியே கட்டழகன் மீது
காதல்கொண்டாளெனக் கண்டேன் - அவள்
மைவிழிகண்டு மயக்கியவன் என்ன
மாயம் புரிந்தனன் என்றேன் - இவள்
மெய்யுடல் பெற்றவன் மீது கொண்ட உயிர்
மெல்லகரைந்ததும் ஏனோ?- அவன்
மையலிலே இந்த மான்,கிளி, பூங்குயில்
மாறிக்குணம் கொள்ளலாமோ

கண்கள் குளமென ஆகிடவே இங்கு
காணுகின்றேன் ஒரு ஓரம் - சிறு
பெண்ணவள் அன்னையும் பேசமறந்துமே
போனதுமோ வெகு தூரம் இதை
எண்ணிக் கலங்குவ தாகுமோ என்மகள்
ஏற்ற துணை கொள்ளல் தீதோ -ஒரு
வெண்ணிலவு வெறும் வானமதில் என
வீட்டினுள் காய்திட லாமோ


நேற்று மலர்ந்தவள் நேசமுடையவன்
நேரெதிரே வரும்போது -மன
மாற்றமடைந்தவன் மேலே மயங்கிடும்
மாயம்தனை மனமெண்ணி - வரும்
ஆற்றாமை பொங்கிட அஞ்சிநின்றேன் ஒரு
அந்தி வந்த பொழுதோடு - அந்த
வேற்று மனிதனை வேண்டி எனை விட்டு
வேக நடை கொண்ட தேனோ?

ஓடும் நதியென தானிருந்தாள் துள்ளி
ஓசையுட னில்லம் நின்றாள் - அவள்
கூடும்கடல்தனை உள்ளங்கொண்டாள் எனக்
கொஞ்சமறியாது நின்றேன் - தினம்
ஆடும் உலகதில் நாமறியோ மிது
அத்தனை உறுதி என்றேன் -அது
போடும் புவிஅதிர்வோடு குலுங்கிட
பூமி சுழல் கின்ற தென்றேன்

யாவும் எமதென இல்லையம்மா இந்த
ஆவியும் சொந்தமென் றல்லேன் உயிர்
தாவும் உடல்பிரிந் தோடிட மேனியும்
தீயின் சொந்தம் எமதில்லை - ஒரு
பூவும் கொடிசொந்தமில்லையம்மா - இந்தப்
பூமியும் எம்மது இல்லை அந்த
மேவும் வெளி உயர் மேகமலைந்திடும்
வானமும் சொந்தமா? அறியேன்!

No comments:

Post a Comment