Friday, January 21, 2011

தமிழ் சொல்ல.. உயிர்கொல்ல..!

தமிழே உன்னைக் கண்டால் அஞ்சித் தலையேசுற்றுதடி
தாகம் கொண்டேன் வாழ்வில் என்னைத் தனியே விட்டுடடி
அமுதே என்றுஉன்னைக் கற்றேன் ஆனா என்றெழுதி
ஆனாலின்றோ தமிழைப்பேசத் தலையே போகுதடி

அம்மா என்று மண்ணில் எழுதி அழித்தேன் அருச்சுவடி
அதனால்தானோ அன்னை மண்ணுள் அழியக் கொன்றவிதி
சும்மா தமிழைப் படியென் றப்பா சொல்லிப் போட்ட அடி
சொன்னாற் தமிழை விழுதேமுதுகில் எதிரி துவக்குப்பிடி

தாங்கா தலறும் போதிற் கூடத் தருணம் பார்த்துக்கடி
தமிழைப் பேசத் தலையும்போகும் சற்றே நிறுத்துங்கடி
நீங்காமனதில் கற்றோம்அன்று நெஞ்சில் கவிதையடி
நினவில் கனவில் நேரில் ஊரில்நிறைந்தாய் இன்பமடி

ஆனா லின்றோ தமிழைப்பேச அச்சம் கதவையடி
அக்கம் பக்கம் பார்த்தே மூடிப் பேசும் அவலமடி
தேனாய்ப் பேசிச் சிரித்தோம் தமிழை திமிரில் தலை நிமிர்த்தி
தெய்வத் தலைவன் இருந்த போது கதையே வேறுவழி

வயலின் பக்கம் சென்றேன் மாடு அம்மா என்றதடி
குலையும் நடுங்கி திகைத்தேன் எதிரி கிட்டே இல்லையடி
அயலில் ஆடு குழையைத் தின்று அம்மே என்றதடி
அடடா இதுவே போதும்என்று உளமே மிகிழுதடி

முடியை வெட்டக் கடையில் நின்றேன் முன்னே அவன்வந்தான்
முரட்டுப் பார்வை கண்டேன்”தமிழன் தானேநீ”யென்றான்
இடிபோ லெண்ணி ஏனோ என்றேன் இகழக் கண்வெட்டி
முடியைவெட்டத் தேவையில்லை சிரசைவெட்டென்றான்

முடியைவெட்டும் துணிவே போதும் தமிழன் தலைவெட்ட
முழுதாய் ஈழத்தமிழன் வாழ்வு பலியேஉயிர் கொள்ள
குடிநீர் கிணற்றில் பிணமேகாணும் கொடுமைஎன்சொல்ல
கேட்பார் எவரும் இல்லைத்தமிழே பிழைநீ நாமல்ல


புயலே வந்து புகுந்தாற்கூடத் தமிழே கொல்லுதடி
புனலும் ஓடிப் புகுந்தாற் கூட போவது ஈழமடி
அயலே நின்று அரவம் கூட ஆளைத் தீண்டுதடி
யார்தான் இவரேதமிழன் என்றால் ஆடிக் கொத்துதடி

வழியே நின்று தலைமுறையாக வாழ்ந்த ஈழமடி
வாசல்கதவை திறந்தா லின்று வருவது கொலைஞரடி
அழிவே என்று அணையும் தென்றல் அதுவும்போனதடி
அவனும்தெய்வம் அஞ்சி ஒளிந்தான் யாரும் இல்லையடி

தனியே நின்று தமிழைக் காக்கத் தவிக்கும் வேளையடி
தலையேஇன்றி போகும் நிலைமை தமிழர்க் கானதடி
எனியென் செய்வோம் எம்மைக்காக்க எவரும் எடுத்துஅடி
இரண்டே வைத்தால் போதும் உலகம் உள்ளேதள்ளுதடி

உரிமை என்றால் உயிரும்போயே உடல்தான் மிஞ்சுதடி
உணவைக் கேட்டால் உதைதான் நெஞ்சில் ஓங்கிப் படுகுதடி
அருமைதமிழை அறியா துரைத்தல் அருகில் கத்தியடி
அய்யோ என்று அலறக்கூட அச்சம் தமிழதடி

இருளில் வாழ்ந்து உயிரை கையில் எட்டிப் பிடித்தடி
எத்தனைகாலம் வீட்டுள் வாழ்வோம் சுற்றி மிருகமடி
அருகில் வந்து கதவின் ஓரம் அவைகள் நின்றபடி
அகலத்திறக்கும் தருணம் பார்த்து ஆளைதின்னுதடி

தமிழே எந்தன் தாயே உந்தன் புதல்வர் கோடியடி
தரணி எங்கும் பரந்தே வாழ்ந்தார் தனிநாடில்லையடி
தமிழன் கொல்லத் தட்டிக் கேட்க தலைவர் இல்லையடி
தமிழாம் ஈழம்இன்று, நாளை இன்னோர் தேசமடி

உலகத்தமிழா எண்ணிக்கொள்ளு இற்றை வரையும்நீ
எதுவுமில்லா அகதி, உரிமை எங்கும் அற்றாய்நீ
கலகம் எல்லாம் ஈழம்தானேகவலை ஏதென்று
கணக்குபோட்டால் கழித்துப்பார் எம்விடையே உன்மீதி

காலைப்பிடித்து கெஞ்சிகேட்டு வாழும்நிலைமைதான்
கடலில் கொல்ல கவிதைபாடி காலம் போகும்தான்
வேலை செய்து நாளும்போகும் வயிறும்நிறையும்தான்
வீரம்பேச காலைஊன்ற தேசம் இரவல்காண்

No comments:

Post a Comment