Friday, January 14, 2011

பொங்கலோ பொங்கல்!

பொங்கியவீரமும் புருஷ படைகளும் எங்கேயடா - அதில்
தங்கியமறமும் தாங்கிய உள்ளமும் எங்கேயடா - ஒரு
வெங்கனல் வீசிய வீரர்கள் ஐயோ எங்கேயடா - உடல்
தொங்குது கைகளில் பொங்குவதோ சொல்லு எங்கேயடா

பாடைகள் ஆயிரமாயிர மாகுது பொங்கிடடா - இவர்
ஆடைகள் போகுது ஆளுயிர் மாளுது பொங்கிடடா - அவர்
காடையர் கூவி கலந்தனர் நாட்டுக்குள் பொங்கிடடா - இன்னும்
பேடைகளோ இன்னும் பேசுவதேதடா பொங்கிடாடா

கைகள் பிணைத்துமே கண்கள் விழித்திடக் கொல்லுகிறார் - நம்
மெய்கள் அழித்துமே மேனி துடித்திட கொல்லுகிறார் - படு
பொய்கள் உரைத்தவர் பூமியின்மீதுயிர் வாழுகிறார் - இவர்
செய்கை மறந்தொரு தேன் சுவைபொங்கலும் தேவையதோ

வெட்டியபோதினில் வீழ்ந்திடக் குருதியும் பொங்கியதே -
சுட்டவர் கொன்றிடத் தூயவர்விழிநீர் பொங்கியதே - அய்யோ
பட்ட இழிமையில் பாவையர் மூச்சனல் பொங்கியதே - இதை
விட்டு என் வீட்டினில் வெறொரு பொங்கலும் வேண்டியதோ?

பொங்கிய துயரும் பூவிழி சோர்ந்திட வாழுகிறோம் - இங்கு
எங்குமே துன்பம் ஏழடி வெள்ளமும் மாளுகிறோம் - இவள்
கங்கையும் எம்மினம் கொல்ல எழுந்தனள் பாவிகளே - இனி
சங்கு முழங்கிடும் சாவு- பரந்தெங்கும் பொங்கிடுமே

பொங்கிட எண்ணில்பொழுதுவிடிந்திட பொங்கியெழு அவர்
செங்களம் கண்டவர் சிந்தனையோடுநீ பொங்கிஎழு ஒரு
சங்கத்தமிழ் வழி சரித்திரவீரனே பொங்கியெழு - உன்
பங்கினை மீட்டொரு பாகம் பிரித்திடப் பொங்கியெழு

No comments:

Post a Comment