Thursday, March 22, 2012

இயற்கையின் மௌனம்


நீர்சாட்சி நிலம்சாட்சி நீலவிண் முகில்சாட்சி
ஊரெல்லை மரம்சாட்சி உறங்காத மதிசாட்சி
ஏர் சாட்சி எருதோடு எரிநதாறும் தீசாட்சி
தேர் சாட்சி திருக்கோவில் தொங்குமா மணிசாட்சி

கார் மேகம் பொழிமழையும் கடுமிடியும் புயல் சாட்சி
சேர்ந்தாடுங் கிளைமீது சிறுகுருவி அணில் சாட்சி
நேர் வளர்ந்த பனைசாட்சி நிமிர் தென்னை மரம் சாட்சி
கூர் முள்கொள் நெருஞ்சியுடம் கொதிவான வெயில்சாட்சி

வார்த்தைகளில் சொல்லிவிட வழியற்ற பரிதாபம்
பேரவல மொன்றிழைத்துப்   பிறர் காணா  ஏமாற்றி
யார் எவரும் இல்லையென நாற்பதெனு மாயிரங்கள்
ஊரோடு உயிர் கொழுத்தி உன்மத்த மாடியவன்

பார்த்திருக்க அன்னையவள் பாலகனைப் பிள்ளைதனின்
சீர்செம்மைத் தமிழ் மாந்தர் சிரசெல்லாம் கொய்தவனை
ஒர் சாட்சியில்லாது ஒழித்துவிடக் குழிதோண்டி
வாரிமண் மூடி உடல் வாழ்வழித்துச் சிரிப்போனை

நீதிதனும் கேட்கவில்லை நேர்மைமனம் துடிக்கவில்லை
ஆதி முதல் உலகாளும் அன்னையவள் இயற்கைதனும்
பாதிதனும் பார்த்தவையில் பட்ட பழி துன்பமதை
நீதி தெய்வசபையேறி நேரில் உண்மை கூறவில்லை

பொய்கை மலர் கண்டதனை போயுண்மை கூறாதோ
தெய்யெனவே துள்ளுமலை தெரியுமுண்மை சொல்லாதோ
பெய்மழையில் தூறல்தனும்  பிணமான காட்சிதனை
மெய் நீதிவழி சென்று மேலுலகில் கூறாதோ

கையிழந்து காலிழந்து கண்ணிழந்து நெஞ்சிழந்து
மெய்யிழந்து மேனியுடன் மிச்ச உயிர் விட்டுவிட
உய்யும் வழிஅற்றோரை ஓடிவந்து காவாதோ
பொய்யுரைத்த நீசர்களைப் பிழையுணர வைக்காதோ

எல்லையெது மற்றபெரும் இயற்கையோ, மங்கையரை
பொல்லாத கொடுமை செய்யும் பிணியோரைக் கேட்காதோ ?
தொல்லைதனும் தினம்செய்து துணிவோடு பொய்பேசும்
வல்லவரென் றானவரை  வான் தெய்வம் கேட்காதோ?

No comments:

Post a Comment