Wednesday, March 28, 2012

தமிழே துயர் நீக்கும்!

கலையும் கனவின் கற்பனை யாவும்
கவலைதந்தே போகும்
அலையும் மனதில் ஆசைகள் எழவே
தொலையும்நிம்மதி தானும்
மலையும் எதிரே நிற்பதுபோலும்
மனதுள் துயரம் சூழும்
கலையும் தமிழும் இசையும்கூடின்
கணமே துன்பம் போகும்

இலையும் தளிரும் பூவும் பூக்கும்
இளமை கொண்டே தமிழும்
குலையும் கொள்ளும் கனியின் இனிமை
கொண்டே நிதமும் காணும்
அலையும்கடலும் அதுபோல் ஆழ
மறியாத் தமிழின் பெருமை
தொலையும் வண்ணம்இன்றிப் பேசத்
தமிழை முழுதாய் கொள்வோம்

குலையும் நடுங்கும் கொடுமைசெய்வோர்
கொத்தும் பாம்பும்கூட
அலையும் காற்றி லெழும் இன்னிசையாம்
அதிலே மயக்கம் கொள்ளும்
வலையும் மீனைக் கொள்ளும் அதுபோல்
வண்ணத் தமிழும் எம்மில்
நிலையும் மாற்றும் நெஞ்சை கவரும்
நினைவை அன்பால் வெல்லும்

தலையும் மேவி வெள்ளம்பாயும்
நிலையும் வந்தாலென்ன
அலையும் கதிரும் இரவில்தோன்றி
ஒளியைத் தந்தாலென்ன
சிலையும் உயிரைப் பெற்றே வீதி
சென்றாலும் நற்தமிழோ
கலையும் இன்பம் தமிழின் இனிமை
காணும் என்றும் மாறா

இலையென் வாழ்வில் தமிழேயின்றி
இன்னோர் மொழி; எவ் வூறு
நிலை யென்றாலும் தமிழே யன்றி
நில்லா துயிரும் கூடு
விலை யென்றில்லா வாழ்வில் துயரம்
விலகும் தமிழைப் பாடு
தொலை வென்றாலும் சுற்றும் மனதோ
தமிழ் சொல் எந்தன் நாடு

2 comments:

  1. இலையும் தளிரும் பூவும் பூக்கும்
    இளமை கொண்டே தமிழும்
    குலையும் கொள்ளும் கனியின் இனிமை
    கொண்டே நிதமும் காணும்

    இனிமை தமிழை பாடிப் பரவிய அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. நன்றி தங்களின் பாராட்டுக்கு!
    மிக்க மகிழ்வே!

    ReplyDelete