Sunday, December 12, 2010

ஆண்ட மைந்தரே மீண்டும் ஆளுவோம்!

காற்றினி லாடிடும் தீபங்கள் கண்டேஎம் கண்கள் அழுகின்றது
தேற்றவும் வார்த்தை யில்லாதொரு நெஞ்சமும் தீயாய் எரிகிறது
நேற்றிருந்த பெருவாழ்வு சிதைந்தொரு நிர்மலம் ஆனதிங்கு
தோற்ற அறமும் நல் வாய்மையும் நீதியும் எங்குதான் போனதின்று?

கல்லறை சுற்றியே அன்னையரும் தங்கை கட்டியவள் மனைவி
வல்லவீரர் தம்மின் சொந்த உறவுகள்  வந்து விழுந் தழவே
வெல்ல வந்த விதி வேடிக்கை ஆக்கியே வீரர்தமை எதிர்த்து
கொல்ல விளைந்ததும் குற்றம் புரிந்ததும் கூடிஅழித்ததென்ன?

மண்ணைத் தொடுபவன் கையை எடுத்திட மைந்தர் குழுமிநின்றீர்
பெண்ணைத் தொடவரும் பித்தனைக் கண்டதும் பீதிகொண்டோட வைத்தீர்
எண்ண முதலெழுந் தோடிஇடர்களைந் தெத்தனை வண்ணமிட்டீர்
என்ன நடந்தது, ஏன்இது ஆனது,  யாரிடம் நீதி கேட்போம்?

மின்னு மொளிர்தேவ லோகமுறைந்திடு மாதி சிவனிடமா?
கன்ன மறைந்திடில் காட்டுகன்னம் என்ற தேவமகனிடமா?
பின்னிச் சுழன்றிடும் பூமியைக் காத்திடும் ஆதிசக்தியிடமா?
இன்னும் எவர் உண்டு என்னநடந்தது எங்குபோய் கேட்பதிது?

நீதி நேர்மையெனச் சொன்னவரோ அவர்நெஞ்சில் துரோகமிட்டு
ஓதி விடுத்த தோர் பேயெனவே மாறி ஓரவஞ்சம் புரிந்தார்
ஆவி துடித்தது அத்தனைமேனியும் ஆவெனவே அலறி
பீதிபிடித்துக் கதறித் துடிக்கையில் பித்தம் பிடித் தழித்தார்

காத்தவர் தம்மையும் காவல்புரி தோட்டக் காய்கனி பூவழித்தே
நீத்த வெறும் சாம்பல் காடுசுடலைக்கு நேர்நிக ராக்கி வைத்தார்
வேர்த்த மனதுடன் வெம்மைகொண்டே இங்கு வேண்டுகிறோம் விதியே
நேத்து நடந்தது மாற்றி நமக்கொரு நீதி கொடுத்திடுவாய்!

வெந்தழல் வீசிடும்மைந்தர் கனவுகள் வேண்டும்விடியல்பெற
சந்தனம்பூசிச் செழித்த உடல்தன்னின் சுந்தரஜோதி தன்னும்
வந்து எமதுடல் பற்றிஎழுந்தொரு வீரம் செறிய வேண்டும்
சிந்து படித்தொரு செந்தமிழின் பகை வென்று முடிக்கவேண்டும்

கண்ணிமை மூடித்  திறக்கமுன்னே கதிர் கண்டபனி யெனவே
மண்ணின் பெரும்பகை எண்ணியொழித்திட்ட மைந்தர்வலிமைகொண்டே
தண்ணிலவின் ஒளி மின்னுமிரவினில் தாயுட னன்னமுண்டு
அண்ணனும் தங்கையும் ஆழ்கடலின்யுத்தம் அள்ளியவீரம் தன்னும்

அத்தனையும் கொண்டு சொத்துப் பரம்பரை அன்னியர்கையிருந்து
மொத்தம் பறித்துமே ஈழமண்ணி லெங்கள் முத்திரை குத்திடுவோம்
நித்திய மைந்தரின் பாதைதன்னி லீழ நாட்டின் அரசமைத்து
பத்துத்தலைமுறை ஆண்டுகளித்திட உற்ற வழி வகுப்போம்

No comments:

Post a Comment