Sunday, December 12, 2010

வரம் தராத வசந்தங்கள்

நெய்யூறும் விழிகொண்டு நெஞ்சக்கருமைதனில்
பொய்யூறும் பேச்சாலே புதுவண்ணஒளியேற்றி
ஓய்யாரம் கொள்ளுமுன் ஒடிந்தஇடை நளினம்
தெய்யென்று ஆடத்தான் தேவிமயக்கினையே

தேகம் அழைந்துகுளிர் தென்றல்வரும் பொய்கையிலே
ஏகம் நனைந்துடலை ஏற்றமிட மஞ்சள் வெயில்
தாகம் கொடுத்துமனம் தான் மறக்கச்செய்தவளே
மோகம் எடுக்கவைத்த முழுநிலவே எங்குசென்றாய்

பாவி எனைவிடுத்து பகல்நிலவாய் ஆனதென்ன
நீவி மனம்கிளர்ந்து நெஞ்சுரைத்த மெய்மாறி
தேவி நீசென்றதெங்கே தென்றல்தனும் அறியாதோ
கூவிவிழித் துன்னைக் கூப்பிடவும் கேளாதோ

வற்றும் குளத்தின் ஒரு வண்ணமலர் போலிருந்து
குற்றுயிரில் வாடுதெனக் கோகிலமே வாடுகின்றேன்
இற்றைவரை நீயும் எழுந்தருள வில்லையடீ
சற்றும் இரங்கிவரம் தாராத வசந்தம் நீ!

உனையிழந்த வாழ்வில் உடல்நீவும் தென்றலதும்
சுனை யெழுந்த நீரலையும் செவ்வான இளங் கதிரும்
தனை இழந்த பூவுமதிற் தாவும் சிறுவண்டினமும்
புனை கவியும் யாவுமொரு புண்ணாக நோகுதடீ

சொட்டும் மகிழ்வில்லை சூழ்நிறைசேர் இன்பங்கள்
கொட்டும் நச்சரவக் கொடுமையெனக் தோன்றுதடீ
வட்டவிழிக் கண்மலரே வானமதில் ஏறியிவன்
கிட்டஅடி வைத்துன்னை கட்டிவிடத் தோன்றுதடீ

பூவைக் பார்த்தழுதேன் புதுமலரைத் தாவென்றேன்
தாவும் காற்றிடமும் தலைமகளின் இடங்கேட்டேன்
பாவைமறைந்த இடம் பார்த்தவர் யார் எனக்கேட்டு
சாவை பிரித்த நிலம் தனில்வீழ்ந்து அழுதெழுதேன்

வந்திடெனக் கேட்டென்ன வரவில்லை யென்னுயிரே
எந்தநா ளிளகி மனம் எழுந்தருளி என்குடிசை
வந்திடுவாய்? எண்ணிஉயிர் வாழுமுடல் தான் நீங்கி
வெந்திடவும் செய்வாயோ வரம் தாரா வசந்தமே

வாழ்வில்நீயில்லாத வசந்தங்கள் உண்டோடி?
பாழும் துயர்வாழ்வில் பார்த்தநிலை போதுமடி
மீளும் நினவுகளில் மீண்டும் உனைகேட்டும்
வாழும் உலகெனக்கு வரம் தராத வசந்தங்களே

1 comment:

  1. அருமை பாராட்டுக்கள்

    ReplyDelete