Saturday, December 4, 2010

விடுதலை வேலியில் கதியால் போடு!

அடித்தீர் கடிக்கவரும் அரவந்தன்னை
    ஆவென்று அலறியது உலகப்பந்து
கடித்தே உடல்நஞ்சாய்க் கருகிவீழ
    கண்டும் கண்மூடிகிடந்ததன்று
துடித்தீர் நிலைகண்டு சோர்ந்தபோது
   சூரியனும் ஒளிதந்து உறுதியாச்சு
முடித்தார் பகல்தானும் இரவென்றாக
  முகில்மூடி ஈழமண் இருளுமாச்சு

கடுந்தோள் வலிகொண்டு களமுமாடி
   காற்றின் வலிகொண்டு தினமும்ஓடி
கொடுந்தேள் விளையாடும் காடுறங்கி
   கும்மிருட்டுவேளையில் குளிரும்தாங்கி
படுந்துன்பம் பட்டுயிரும் பாதிகெட்டு
    பாயில்லாத் தரைமீது படுத்துறங்கி
சுடும்படையும் சுடுவனையும் வழியிற்கண்டு
     சுழன்றுபகை முடித்து நிலங் காத்தீரன்றோ

பெற்ற துன்பம் பேசரிய கொடுமை என்றால்
   பிறந்திட்டவீரம் ஓர் பெருமையன்றோ
உற்ற துயர் அத்தைனையுமுடனே போகும்
   உரிமைபோர் ஓரடிமுன் வைக்கத்தானே
கற்றவரும் மற்றவரும் போற்றும் வண்ணம்
    கண்ணியமும் காத்தரசு கண்டீரன்றோ
விற்றவரெம் மினத்திடையே விலையாய்போக
    வீடிழந்து நாடிழந்து விரயம் ஆனோம்

புற்றிலெழும் ஈசலெனப்புறப்பட்டேஓர்
     பொழுதில்பலர் தலைசீவிப் பொட்டும்வைத்து
வெற்றி எனவந்தவரே வீரம் கண்டு
    விஷமாக சேலைகட்டி வீரங்கொன்றார்
சுற்றிவரும் வானத்தில்  கெட்டிக்காரச்
   சுடும்பறவை வட்டமிட்டு முட்டைபோட
பற்றிஎரி  தீவெடித்துப் பலதும் போக
   பாரெங்கும் கிலிஎடுத்துப் பாவம் கொண்டார்

எத்தனைதான் போனாலும் இறவாவீரம்
  இட்டபெருங்கனவெனும் லட்சியமாம்
வைத்ததனை எடுத்திடுவர் வினைகள் செய்தோர்
    வாங்காமல் போகவிட மாட்டோமன்றோ
சத்தியமும்வென்றிடட்டும் வெல்லவைப்போம்
   சாவினையும் தந்தவரோ மரணத்தேவி
கைத்தலமும் பற்றிடக் காண்போம் நீதிக்
   கரங்களிள் தொங்கிடவும் செய்வோம்பாரீர்

நித்திரையே கொண்டாலும் மைந்தர்கேளீர்
  நினைவெல்லாம் சுதந்திரத்தீயே கொண்டோம்
இத்தரையும் மீட்டிடுவோம் இன்பம் காண்போம்
   எடுத்த அடிமுன்வைத்து எல்லைபோட்டு
புத்தரும் கந்தவேள் சேர்ந்துவாழப்
   புறப்பட்ட கதைக்கொரு முடிவுகாண்போம்
வித்தகரே உம் வீரம் கொண்டே நாமும்
  விடுதலையாம் வேலிதனில் கதியால் நடுவோம்
.      

No comments:

Post a Comment