Thursday, December 16, 2010

அழுவதும் ஏனம்மா?

கண்ணே கனியமுதே கனிமலரே வாடுவதேன்
வண்ணமுகம் சோர்ந்து வாயழுது கதறுவதேன்
பொன்னே நீயழுதால் பூக்கள்மனம் நோகுமடி
தண்ணீர் அலையடித்து தாங்காமல் ஆடுமடி

வாடுவதென் மலரென்றால் வையகமேஇருளாதோ
ஓடிஎரி வெயிலோனும் ஓங்குமலைஒளியானோ
பாடுவது குயிலென்றால் பைந்தமிழும் உருகாதோ
பனியுருகிக் குளிரெடுத்து படர்காற்றும் வீசாதோ

தேடுவது எதுவென்று திங்கள் வந்து கூறாதோ
தென்திசையின் காற்றெழுந்து சேதிசொல்லி ஓடாதோ
நாடுவது என்னவென்று நல்வார்த்தை கூறாயோ
நல்லதொரு வழிபிறந்து நானிலமும் வாழ்த்தாதோ

ஏடுவரும் கவிதனிலே இழைவதென்ன? எழுமுகிலே
ஓடுதொடு வெண்ணிலவை ஊறுங் கண்ணீர் துடைக்க
காடுவழிப் பாதையிலே காணும்முள் குத்தியதோ
பேடன்னம் சோர்ந்துநடை பிழைப்பதென்ன பேசாயோ

தேவரருள் கூடட்டும் திங்கள்மனம் பூக்கட்டும்
பாவமங்கு போகட்டும் பனித்தவிழி சிரிக்கட்டும்
பூமலர்ந்து பொங்கட்டும் புதியநதி துள்ளட்டும்
தாவுமயில் தோகைதனை தான்விரித்து ஆடட்டும்

இருள்மறைந்து ஒளிரட்டும் இன்பகீதம் இசைக்கட்டும்
கருமைதீயி லெரியட்டும் கனவுகளும் பலிக்கட்டும்
ஒருமை ஓங்கி உள்ளமதில் உற்ற அன்பு பெருகட்டும்
பரிதிபோல் ஒளிபிறந்து பாசவாழ்வு ஜொலிகட்டும்

No comments:

Post a Comment