Wednesday, December 15, 2010

அன்னையின் கண்ணீர்

வீசியகாற்று மொருகணம்நின்றுபின்
   வீசிவிரைந்து சென்றான்
வாசமெழும்மலர் தானும்மலர்ந்திடும்
   வண்ணம் மறந்துநின்றாள்
மேவியேவானில் எழுந்தவெய்யோன்
    கணம்வீசு மொளிமறந்தான்
தாவும்கடல்அலை கூடமறந்தொரு
     நாழிஉறைந் திருந்தாள்

பாடும்பறவைகள் கீதம்நிறுத்திஓர்
     சோகம்தன்னில் இழைய
வாடும்முளம்கொண்டு கோலமயில்தன்
     தோகைசுருட்டி வைக்க
ஏனென்றுஎண்ணி இங்குமங்கும்பார்க்க
     பேரிடிமின்ன லுடன்
வானிடிந்துதலை வீழ்ந்ததெனபெரும்
    கோலமெதிரில் கண்டேன்

பூசும்சந்தணமென் மேனியிலேவெறும்
     புழுதிபோர்த் திருக்க
பாசமொளிர்விழி மீதினிலேபெரும்
     நீர்வழிந்தோடி நிற்க
பேசும்செந்தமிழ்சொல் வாயினிலேஐயோ
      போதுமே துன்பமென
கூவித்துடித்தெங்கள் ஈழஅன்னைபடு
     வேதனையில் கிடந்தாள்

பாவிகள்செய்த கோலமதைகண்ணால் பார்க்க முடியவில்லை
தூய் தமிழ்மற வீரர்கள் பெற்றவள்மேனி துவண்டிருக்க
தாயவள் தங்க சிலம்பிடும் கால்களில் சங்கிலி கோர்த்து வைத்தே
பூவெனும் கைகள் பிணைத்தே விலங்கிட்டுப் பின்னிகிடந்தன காண்

பேயில் இழிந்த பிறவிகள் செய்ததோர் கோரம்கொடுமையினால்
வாழும்சுதந்திரம் தானிழந்து தலைவைக்கும் முடி இழந்து
நாவிற் துடித்துப் பதறுங் குரலெடுத்தாஆ..என் திருமகனே
பாவிகள்செய்யும் கொடுமைகள் எல்லையை மீறிய தென்றழுதாள்

நீதிஇழந்தோம் நினைவிழந்தோம் கொண்டநிம்மதி தானிழந்தோம்
பாதிமனிதஉயிர் இழந்தோம்எல்லை காத்தபடைஇழந்தோம்
தேசமிழந்தோம் திறையிழந்தோம் திக்குநாலு மிழந்தவராய்
வாழும்உரிமையும் வார்த்தையுமின்றி வஞ்சனையில் அழிந்தோம்

ஓவென்றழுதிட்டஈழ அன்னைமீண்டும் ஓர்பெருமூச்சு விட்டு
மாபெரும்வீர மைந்தர்கள்போயினர் மண்ணுள் விதையெனவே
மாவுலகும் ஒரு சேர எழுந்தொரு சாவினை புன்னகைத்து
தேனில்விஷமிட்டு தந்தார்சுதந்திர வாழ்வென்னும் எம்பசிக்கு

ஆவனசெய்தென்னை மீட்டிடாஎன்று அன்னைதுடித்துநின்றாள்
வேதனையில் மனமுள்ளேஅழுதிடத் தாயே தமிழன்னையே
மோசமிழைத்தவர் நான்கு திசையும் நிறைந்தனர் நம்மீழமோ
தேசமெங்கும் மொழிமாறித் திரிந்து சிங்ஈழம் என்றானதம்மா

பேர் பொறித்த தமிழ்வீதிப் பலகைகள் மாறிமொழி சொல்லுதே
தேரிருக்கும் திருக்கோவிலுக்குள் புத்தசாமி குடி போனதே
ஆலமரத்தடி ஆனைமுகத்தானும் அர்த்த நடு ராத்திரி
போதிமரத்தை பிடுங்கிநட்டுவைத்து போனஇடம் அறியோம்

தத்திநடக்கும் குழந்தை மணல் வீடு கட்டக் குழிபறித்தால்
புத்த சின்னமொன்று உள்ளேயிருக்குது தொன்மைபழமை என்றார்
கட்டியொரு கோவில் நட்டுமரம் அரசத்தனையும் புரிந்தே
அத்தைபாட்டி பூட்டன் சொத்துஎமதென்று பச்சைப்பொய் கூறுகிறார்

மெல்லத்தமிழ் இனி சாகுமென்றார் ஈழ மண்ணில்நடக்கிறதே
வெல்லத்திறனை யிழந்துவிட்டோம் எனவேதனையில் அழுதேன்
இல்லை மறந்திடு என்றும் அறம் வெல்லும் நீதி தழைத்து நிற்கும்
கல்லென உள்ளத்துறுதிகொள்ளு செய்யும்காரிய மாற்றிவிடு

நல்லன என்றும் நடந்துவரும் நல்லஅல்லனபாய்ந்துவரும்
செல்வதும்தீது சீறி மறைந்திட நீதிநிலைத்து நிற்கும்
கொல்லவல்ல தமிழ், கூட்டி உலகத்தின்முன்னே எனை நிறுத்து
நல்லவர் காதில் நடந்ததைக் கூறுநம் நாடு பிழைத்துவிடும்.

எல்லாம் சிவன்செயல் என்றுநினைத்து உன்கண்களயர்ந்து நின்றால்
வல்லவிதி நம்மை ஏய்த்துவிடும் இன்றே துள்ளி எழுந்திரடா
சொல்லு உலகமுன் நீதி எங்கேயென்று கைகள் உயர்த்து கத்து
எல்லைகடந்திடுமுன்னே எனதுயிர் வெல்ல வழிசெய் என்றாள்.

No comments:

Post a Comment