Sunday, December 12, 2010

வீரம் விளைந்தவரே!

வீரம் எடுத்து விளைந்தவரே உங்கள்
தாகம்தணிக்க முடியலையே
பாரம் சுமக்கப் பிறந்தவரே இன்னும்’
பாவம் அழித்து முடியலையே
கோரம் நிறுத்த உதித்தவரே எங்கள்
கோலம் சிறக்க முடியலையே
ஈரம் துடைக்க விளைந்தவரே கண்ணில்
இரத்தம் வழியுது தாங்கலையே

விண்ணும் அதிரிட மின்னல் பொடிபட
சங்குமுழங்கிட செங்களமே
கண்ணும் எரிந்திடகாலும் வலித்திட
காடுவயல் நடைகொண்டதுமே
மண்ணும் பறந்திட மாண்டுஎதிரிகள்
மாமலையென்று குவிந்துவிழ
பண்ணுமுயர் பெருவீரம் விளைத்தனை
பாதியில் வீட்டுநீர் சென்றதெங்கே?

பேய்கள் துரத்திட ஓடுகின்றோம் காலும்
பின்னிவலியெழ காட்டினிலே
மாய இருள்வந்து மூடவிழி களும்
மங்கிச் செல்லும்வழி காணாமலே
பாய்ந்து குதறிடும்கோர விலங்குகள்
பக்க இருந்து பலிஎடுத்தும்
காயம் கிழித்துடல் நோகக் கதறினோம்
காக்க எவரையும் காணலையே

எம்மினம் காத்திட்ட உத்தமரே நம்மை
ஏங்கவிட்டு இடைசென்றவரே
செம்மனக் காவல்கொள் சிற்பிகளே தமிழ்
சேவகம் செய்திட்ட மாவீரரே
வெம்மை மிகுந்தது வேண்டும் உதவிகள்
வீரம் விளைந்திட வேண்டுமையா
நம்மில் உறுதியைத்தாரும் அதற்கென
நாடிவந்து எம்மில் சேருமையா

No comments:

Post a Comment