Tuesday, December 14, 2010

ஈழ அன்னை சீற்றம் கொண்டாள் (இது கனவா?)

என்னதொரு சத்தம் கேட்டுக் கண்விழிக்கின்றேன்
இதயமது படபடக்க துயில் கலைகின்றேன்
பின்னிலவு சாளரத்தின் உள் நுழைந்ததன்
பொன்னொளியை என்னருகே பிய்த்து வைத்ததும்
வெண்ணொளியில் பெண்ணொருத்தி வெளியினிலாட
வேல்விழியாள் அழகுரூப சுந்தரிதன்னை
தண்ணொளியில் துள்ளியாடும் தோற்றமும்கண்டே
தங்கமகள் யாரறியத் தாவி எழுந்தேன்

எட்டிநடைபோட்டுமுற்றம் ஏகியபோது
இளையவளோ கண்டுமௌனம் இழையவிருந்தாள்
தட்டியொரு தாளமிட்டு தென்றல் இசைக்க
தளிர்மலராள் கொடியசையும் தன்மையிலாடும்
வட்டமெனும் தோகைவிரித்தாடு மயிலாய்
வான்நிலவில் மின்னும் எழில் தன்னில் மறந்தேன்
கிட்டவந்து ஆடுமவள் கோலம்காணவே
கேள்வியின்றி யாரிவளோ காண விழைந்தேன்

சுற்றி யெங்கும் பூமலர்கள் சுந்தரவாசம்
சுழலும்விரி தென்றல்கொண்டு சென்றிடும் வேகம்
சற்று ஒளி சிதறக் கீழை சரிவெடு வானில்
சார்ந்துறைந்த நீள்படர்வெண் முகிலதின்கோலம்
வெற்று நீலக்கருமையூடு விரைகின்ற பறவை
விடியல்வேளை கண்டுமகிழ் வானது பொங்க
பொற்சிலையாள் பெண்ணிவளோ பொங்கிஆடிடும்
புதுமையேது என்றவளைப் பேசவிழைந்தேன்

தேன் மொழியாம் தேகமிசை தேர்ந்தவள் காணும்
தேர் அசையும் இடையில்வளை யாபதிபூண்டும்
நான்அகங்கள் நூறும் இன்னும்நாற்புற நூறும்
நல்மணிமே கலையுடனே நங்கையில்காணும்
பொன்னணிகள் கண்டிவளோ பூந்தமிழ்தேகம்
பொலிந்தவளாம் என்னபெயர் என்று வியந்தேன்
பின்னும் சடை கன்னங்கரு கூந்தல் விரித்த
பெண்ணவளோ அன்னைதமிழ் ஈழம் நானென்றாள்

வற்றிவாடிக் கண்கள் நீரும் வழிந்ததுபோலும்
வெண்ணிலாவை ஒத்தமுகம் இருண்டதுபோலும்
சுற்றி நின்ற தேகம் நோகச் செய்ததுபோலும்
சுந்தரியோ வாடி ஏதோ சொல்ல விழைந்தாள்
கற்றபாடம் போதும்அன்பு கண்ணிய மெல்லாம்
கடையிலென்னவிலை என்றோதும் இவ்புவிமீதில்
பெற்றபிள்ளை தாயை அப்பன் விட்டொழிந்தோமே
பேசரிய பொற்குலத்தைப் பாழடித்தோமே

நேர்மை பார்த்த நெஞ்சைக்கீறி நஞ்சுபோடவும்
நினைவிழந்து துடிதுடிக்க படமெடுக்கவும்
கூர்மை கொண்டகத்தியாலே குத்திஆடியும்
கொல்பவரைப் பாவமென்று கொல்ல அஞ்சினோம்
பார்வைதன்னில் குருடரென்று பாவிஎண்ணியே
பாலகரைத் தானும்விட்டு வைக்கவில்லையே
வார்த்தை பொங்க துடிதுடித்து வஞ்சியானவள்
வந்தகீத போர்ப்பறைக்குத் துள்ளிஆடினாள்


பகுதி 2

கொட்டிய மேளமும் சத்தமெழுந்திட
கோதைசுழன் றெழவே - ஒரு
வட்டம டித்துயிர் பட்டகொடுந்துயர்
வாடித் துடித்தலற...
தட்டிந டஞ்செயும் பொற்திரு பாதங்கள்
தாங்கி அனலெரிய - சினம்
சொட்டிச் சிவப்பென ரத்தங் கசிந்திட
சுற்றிநடம் பயின்றாள்...

விழிகள் தீயிட மொழிசொல்தேவதை
வேகு மனத்துடனே - பெரு
ஒளிகள் பொறிபடநிலமும் தடதட
வென்று அதிர்ந்திடவே...
மழைகொள் இடியென மனதும் துடித்திட
மங்கை குதித்தனள்காண் - கால்
தளதள வென்று சதங்கை கலீரிட
தாவி நடம் பயின்றாள்...

வீறொடு கோபமும் வீரமெ ழுந்திட
வேகச்சுழல் புயலாய் - பெரும்
நீறுஎ ரித்திட நேரும் விழிக்கனல்
நிலையொடு கொடும்பார்வை...
ஆறுகு தித்திடும் ஆகமணிக்கொடி
ஆடிச் சினத்திடவே - கொடும்
ஊறு விளைத்திட சீறும்புலிக்கெனும்
கோபமெடுத்திருந்தாள் ...

சித்தம் கொதித்தவள் செய்யு நடந்தனை
சுற்றி நின் றாடுகையில் - குரல்
கத்தி அழிந்துமே செத்திடு மோலங்கள்
காதினில் கேட்டதடா..
ரத்த வெறியெடு தீயகொடுஞ்செயல்
புத்தரைப் போற்றுபவர் - உடல்
குத்திஅழித்திடக் கொன்றிடு மெம்மவர்
கூக்குரல் நெடிதெழுவே

வைத்தநெ ருப்பினில் வெந்த இரும்பினை
வார்த்தது காதிலென - நெடும்
கத்தி எடுத்துக் கிழித்துபோல் நெஞ்சு
பட்ட பெரும்துயரோ..
பித்துப் பிடித்தவள் போல நின்றாடிட
ரத்தினச் செவ்விழியாள் - அவள்
வைத்தஅடி தனை வைத்தபடி ஒரு
கற்சிலையாய் உறைந்தாள்

சுற்றிஎ ழும்பிய தூசிஅடங்கிட
முத்தெனும் தேசமகள் - அவள்
முற்றிப் பெருத்தது இத்தருணம் இனி
முன்னே எழுந்திடென்றாள்...
சற்றுத் தயங்கிட என்னையழைத்தனள்
என்று மயங்கிவிட - தனல்
சுற்றிஅடர் பெருஞ்சூரியக் குஞ்செனச்
சோதி விரிந்ததடா..

இத்தனைகால மிழைத்த கொடுஞ்செயல்
அத்தனையும் பொறுத்தேன் - மனம்
செத்தவனாய்க் கிடந்தேன் தமிழா இனி
விட்டு எழுந்துவிடு...
புத்தனின் வம்சம் புரிந்திடுமத்தனை
குற்றம் கொலைநிறுத்த - ஒரு
சத்தியம் நீதி அறம் தனைமீளவும்
சற்று எழுப்பிவிடு..

கெட்டது பூமியும் கேடுபெருத்தது
கள்ளரும் காடையரும் - உயிர்
விட்டதுபோதும் விரைந்திடு எம்மினம்
வேகுது வெந்தணலில்...
கட்டிஉணர்வினை மற்ற இனம்தனை
காத்து இருந்ததெல்லாம் . அறம்
வெட்டிஅழித்திட பக்கதுணை இனி
வேண்டாம்விட்டுவிடு...

வல்லவன் மட்டு மெனப்புவி கொள்வது
வைத்த கொடும்வழக்கு - அவன்
நல்லவ னாகி நலிந்து சரிந்தது
நம்பிழை தான்உணரு..
கொல்லுமிக் கூட்ட மழித்திடு கூடிடு
சொல்லு தமிழ்மகற்கு - மறம்
இல்லையெனும்குறை தீர எழுந்திடு
ஏறிடுஆதவனே..

என்ன வியப்பொரு கண்ணைப் பறித்திடு
மின்னல் ஒளிக்குழம்பு - புகழ்
மன்னன் அவன் ஒளியூடு எழுந்தொரு
மாமலையாய் நடந்தான்..
பின்னை இருந்ததுபோதும் இனிப்பகை
வென்று முடித்து விடு - எழில்
அன்னை தமிழ் இவள்மண்ணின் உரித்திவள்
ஆணையிட்டேன் தொடர்வாய்..

சொன்ன கணத்தினில் மன்னன்கரம்தனில்
சின்னது விரலசைய - பெரும்
மின்னிவெடித்தொரு மேகமுடைந்தது
போலமுழக்கமுடன்..
என்னவியப்பது எழுந்துவிரைந்தது
இன்னொரு போர்செறிவு - படை
பின்னிஉடைத்தது பகைவர்நிலத்தினில்
புகைய பெரும் நெருப்பு...

வண்ண மத்தாப்புகள் வானில் பொழிந்தன
வாரி மழையெனவே - பெரும்
விண்ணு மதிர்ந்திட வேகமெடுத்தொரு
போரும் நடந்ததுவே..
கண்ணை விழித்தவள் என்னைக் குறித்துமே
கனவினை விட்டெழுந்து - கவின்
மண்ணினை மக்களை காத்திடு என்றனள்
மங்கை, விழித்தெழுந்தேன்..

No comments:

Post a Comment