Sunday, March 17, 2013

புகழ்போதை

           

புகழ்போதை தனைவெல்லப் புவிமீதிலே
  புதிதாக எது உண்டு சபைஏறியே
நிகழ்கின்ற எதுதானும் தனைமீறியே
  நேரும் வினோதங்கள் கலைமேவியே
அகழ்கின்ற குழியாவும் அவர்மேனியே
  அடங்குமென் றறியாமல் சில பேருமே
திகழ்கின்ற விதிவந்து மனம்கொள்ளவே
  தெரிந்தாலும்குழி தோண்டும் வழியாகுமே

அலைகின்ற திரையேறி அவன் நீந்தினான்
 அழகென்று அலைகண்டு அதனுற் புகுந்தான்
தலைமூழ்க அலையோங்கி வரும்போதினில்
   தனதுயிரின் நிலைகண்டு கரைவேண்டினான்
நிலைகெட்டுத் தடுமாறி அதில்நீந்தவே
    நேரமதில் உருண்டோடும் விதியானது
குலைகின்ற பொழுதெண்ணிக் குறைவாக்குமோ
    கொடிதெண்ணித் தடையிட்டு உயிர்நீக்குமோ

கதியும்பிழைத் துயிர்கொள்ளப் புயல்வீசுமோ
  கைதந்து உயிர்காத்துக் கரைசேர்க்குமோ
நதிகொண்டபூவாக நலிந்தோடியும்
 நிலைகெட்டு விழும்போது நினைந்தேயவன்
புதிதெண்ணி வரும்போது பகைமிஞ்சுமோ
  பொழுதென்ப இருளோடு புகை மிஞ்சுமோ
அதிசீலஒளித் தீயே அருகோடுவா
   அகிலத்தில் அவன்கொள்ளும் அமைதியும்தா

(வேறு)

அண்டம்பொறி பறந்தோட அனல்சிதறி வெடியதிர
ஆக்குவாய் சக்திதேவி
முண்டம்தலை யென்றிணைய முகம்செய்து தமிழ்கொண்டு
மூச்சினையும் ஊதிவைத்தாய்
கண்டம் கடல்கடந்துவந்து கடுங்குளிரி லுழலகலை
யுணர்வுகொண் டெழெவும் வைத்தாய்
தண்டமெது தருவதெனில் தந்தமகு டம்விழவுன்
தகித்திடும் தீயில் இடுவாய்

குண்டெனுருள் கோளங்களும் கூட்டமைத்துக் கோடியெனக்
குதித்தோடச் செய்ததாயே
வண்டெனச்சொல் மதுவார்த்து வாழ்வில்புகழ் போதைதனை
வழிகாட்டி விட்டதேனோ
செண்டினொடு மலராட செய்தவளே கருவண்டு
தீண்டிவிடத் தெருவில்பூவாய்
மண்ணொடுமண் ணாகஎனை மாறிவிடச் செய்ததுவும்
மகிழ்வானால் மறுப்புமுண்டோ

பிச்சையிவன் உடலீந்து பிச்சையென உயிர்வைத்துப்
பிச்சையெனும் வாழ்வீந்த தாய்
இச்சைதனைக் கொண்டெழுந்தும் இயல்பில்கவி பாடிப்புவி
இரந்துதிரி என்றதெவரோ
பச்சையுடல் மீதுயிரைப் படைத்திட்ட தேவி யுனைப்
பாடிவலம் வாஎன்பதால்
அச்சமில்லை என்றவனை அணை என்று கூறியதேன்
அணையல்ல அணையென்பதோ?


No comments:

Post a Comment