Sunday, March 17, 2013

காலத்தை வென்றவன்

கலையென்ன மனம்மீது கலைந்தோடவோ
கவியின்பத் தமிழ்நாவிற் கசப்பாகுமோ
இலைஎன்ப தொருசொந்தம் எனவாகுமோ
இதைக் கண்டு விழிமூடி இருஎன்பதோ
மலையென்ற மனம்கொண்ட திடமானது
மண்னாகி உருமாறி மறைந்தோடுமோ
தலையெங்கும் தடுமாற்றம் தலைதூக்குமோ
தவிப்பான தெனைக்கூடித் தரைவீழ்த்துமோ

இடர்வந்து வழிமீது இருந்தாடுமோ
இடம்விட்டு இருள்காணும் திசை செல்லவோ
சுடர் கொண்ட மணிதீபம் புயல் கொள்ளவோ
சுடுமென்று ஒளிகாவா திருள் நிற்பதோ
படர்கின்ற துயர் கண்டு பணிந்தோடவோ
பழகும் நற்துணைகொண்டு விரைந்தேறவோ
அடர்வானில் விரிமேகம் ஒளிமூடுமோ
அடடா என் விதியென்று சுடர் தூங்குமோ

இறைதேவி எனயாளும் ஒளிதீபமே
எனதாசை தமிழோடு இன்னும்வாழவே
கறைபூச எனதன்பு மனம்மீதிலே
கருதாது பகையின்றி உயிர்மேவியே
உறைவாய்நீ உயரன்பில் எனையாளவா
உளம்மீது கொளுமின்பத் தமிழ்மீண்டும்தா
மறை வானில் பெரிதான ஒளி தீபமே
மனப்பூத்துத் தமிழ்பாடும் மறுவாழ்வுதா!

No comments:

Post a Comment