Sunday, March 17, 2013

பொங்கல் வராதோ?

         

பொங்கலும் உண்டேன் இனிக்கவில்லை - சில
பூவள்ளிப் போட்டேன் மணக்கவில்லை
தெங்கின் அருகிடை தோன்றும்கதிர் - இன்று
தேசு கொண்டுவீசக் காணவில்லை
செங்கரும்புண்ணச் சுவைக்கவில்லை - ஒளி
சோதி விளக்கேற்ற நிற்கவில்லை
மங்கும் பொழுதென்னும் தீரவில்லை - சில
மேகம் மறைக்குது வெய்யிலில்லை

வண்ண மலர் காலை பூக்கவில்லை = அதில்
வாசமெழக் காத்தேன் வீசவில்லை
கொண்டு வரும் தென்றல் கூடவில்லை  - இன்று
கூவும் சேவல் குரல் கேட்கவில்லை
மண்ணில் உதயத்தைக் காணவில்லை - கோவில்
மங்கல ஓசை மணிகளில்லை
பண்பாடு மீண்டும் தளைத்ததொரு - பொங்கல்
பாரில் விளைந்திட ஏதுசெய்வேன்

பாயும் சுருட்டியுள் வைக்கவில்லை - இந்தப்
பாழும் தூக்கம் விழி நீங்கவில்லை
தேயும் நிலாவென்ற தென்பு நிலை - எந்தத்
திக்கிலும் பாதை தெரியவில்லை
நேயம் நேர்மை எங்கள் பக்கமில்லை - எந்த
நீதியும் ஓசை மணிகளில்லை
காயும் வயலிடைநீருமில்லை - என்ன
காரணமோ பதர் நெல்லுமில்லை

கண்கள் விழித்து கடிதெழுந்து - உடல்
காணும் சோம்பல்தனும் மெய்முறித்தே
எண்ணத்தில் தீயிட்டுப் பானைவைத்தும் - அதில்
ஒற்றுமைச் சர்க்கரை ஊற்றிவைத்து
மண்ணையும் மாகதிர் வெய்யவனை - எண்ணி
மங்கலபாடல் முழங்கியொரு
வண்ணப் புதுபொங்கல் செய்வதெப்போ - அதை
வாயில் வைத்துசுவை கொள்வதெப்போ ?

No comments:

Post a Comment