Thursday, March 14, 2013

காதல் வெறுப்பு

நீர்வார்த்து நீரினிடை நெளிந்தோடவும்
  நீந்துகயல் நெளியலையும் உருவாக்கினாள்
பார் செய்து பரந்தவெண் பனிமலைகளும், 
   பட்ட கதிரா லு
ருகி வீழும்நதி
நேர் நிற்க வெயிலோடு நிழல் மரங்களும்

   நீள் வானம் நீந்துமெழில் மேகங்களும்
சீர்ஆக்கி உலகமைத்து சிலமாந்தரும்
  செய்தவரை வாழென்றே சிரித்துநின்றாள்


யாராக்கி மனிதமதில் அறிவையீந்து
  ஆணாக்கிப் பெண்ணாக்கி அவர்சேரவும
பேராக்கி அன்னையொடு  பிள்ளையென்றும்
  பெற்றவரில் தந்தையும் உருவாக்கினாள்
கூராக்கி மனங்கொள்ள உணர்வீந்தவள்
  குருதி தசைஎன்புடனே கூட்டி வைத்தாள்
தேராக்கி வாழ்வுதனை தினமோடென
  தேகமதில் உணர்வோடு உயிரையீந்தாள்


விண்ணாக்கி விண்ணிறைந்த கோள்களாக்கி
  விளையாடி அசைக்கின்ற \சக்தி தேவி
ஆண்காணப் பெண்ணழகு, அன்பினோடு
  அறிவீந்தும் அதைமீற உணர்வு தந்து

கண்ணாக்கி கன்னியிடம் காதலெனும்
  கருவாக்கிப் பொருளாக்கிக் கனவாக்கியும்
மண்ணாகப் போகுமுடல் மதன் வீசிடும்

   மலர்க்கணைபட் டுள்ளமும் மயங்கவைத்தாள்

வானாக்கி வெளியாக்கி விண்மீன்களும்
  வண்ணமதி விளையாட வழிசெய்தவள்
தேனாக்கி தேன்மலரில் சுவையாக்கியும் 
  செய்தபின்னே தேவையென வண்டாக்கினாள்
தானாக்கி மனித உடல் தன்னிலிச்சை
   தனையாக்கி குலமாக்க விதியும் செய்தாள்
ஏனாக்கிவைத்த இந்த இயற்கை யீர்ப்பை
   இழிவென்று இயம்பி இதைத் தள்ளலாமோ


இறைநோக்கம், இருவர் மனம் ஒன்றாகுதல்
  இளைமைதனும் தாய்மையின் ஏதுவானால்
கறைகொண்ட உணர்வென்று கருதலாமோ
  காதல் பெருந் தவறென்று தள்ளலாமோ
குறை காணின் இறைதானும் குறைசெய்யுமோ
  குற்றமவள் குணமென்று விதிசெய்வதோ
நிறைவற்ற எண்ணமென விரல்நீட்டினால்
  நீயென்று தீயள்ளி பொசுக்கிடாதோ


ஆதலினால் காதலினைச் செய்வீரென
  அகிலமதில் யானுரைக்க வில்லையையா
காதலென்ப குற்றமெனக் கருதவேண்டாம்
  கருணையுடன் நோக்குங்கள் காதலர்களை
பாதகமே யில்லாது பறந்து வானில்

   பறவைபோ லிருவரையும் மிதக்கவைத்து
நாதயிசை மாலையணி தோளாராக்கி

   நல்லதொரு வாழ்வீந்து மகிழுவீரே!

1 comment: