Monday, February 6, 2012

சிரிப்பதும் அழுவதும் ஏன்??


நீலமுகிலோடும் வானிலெழுந்திடும்
நித்திய சூரியனே - நினைப்
போலும் ஒளியுடன் வாழும்மனிதரும்
பாரிலிருக் கையிலே
கால விதியிதோ மாலைமதி கெட்டு
காணும் பிறை யொளியாய்-பலர்
கோல மழிந் துயிர் கொள்ளும் துயருடன்
கூடியிருப்ப தென்ன?

மாலை மலர்ந்திடும் பூக்களும் உண்டதை
மேவி இருள் பரவும் - அதி
காலை மலர்களின் வாழ்வு ஒளிர்ந்திடும்
காணும் இரண்டுவிதம்
சாலை யோரம்மரம் கீழும் வாழ்ந்துவரும்
சந்ததி யொன்றிருக்கும் - பக்கம்
மேலு யரும்மாடி மெல்லிய பஞ்சணை
மீது துயில் சிலர்க்கும்

கானமிடும் நல்ல வானில் குருவிகள்
ஊர்வலம் செய்யழகும் அங்கு
கூனல் நிமிர்முகில் கூட்டங்கள் பஞ்சென
கோலமிடும் எழிலும்
தேனொளி மின்னிட வானிடை ஆயிரம்
தீபங்கள் வைத்தவளோ - மன
மானது ரம்மிய மாகக் களித்திட
மஞ்சள் நிலவு வைத்தாள்

ஆனதி வைசெய்த தேவியும் ஏனங்கு
அத்தனை கோபங்கொண்டு - பல
மான இடியுடன் பூமிஅதிர்ந்திட
மின்னலை கொண்டுவைத்தாள்
வானம் அழுவது போல மழையுடன்
வாரிப் புயலடித்து - பெரி
தான முரண்படும் பேய்மழை ஊதலும்
ஏனோ நிகழவிட்டாள்

பூவழுதால் இதழ்தேன்வழியும் அதைப்
பூவுலகே யறியும் - அலை
மேவுகடல் மீது மீனழுதால் அலை
யோடு கலந்துவிடும்
தாவும் முயல் என்றும் தாவியோடவேண்டும்
தப்பிப் பிழைப்பதற்கும் - விதி
யாவும் குறையின்றி சாதுவெனப் பிறந்
தாலும் துயர் இருக்கும்

பூவும் உதிர்ந்திடப் பொல்லாப் புயல்வந்து
பற்றிடத் தேவையில்லை - மலர்க்
காவும் மலைதொட்டு வீசும்தென்றல் தொட
வீழும் விதிமுடியும்
நோவும் அழுதிட நூறுதுன்பங்களும்
நெஞ்சில் குடியிருக்கும் -இதை
யாவும் அறிந்திடில் தோன்றும் எண்ணங்களில்
உண்மை நிலைதிகழும்

2 comments:

  1. குயிலின் ஓசை கேட்டு மகிழ்ந்தேன்
    நானும் கவிதையென்கிற பெயரில்
    எதையெதையோ கிறுக்கி
    சுய இன்பம் கொள்கிறேனோ
    எனத் தளர்ந்தேன்
    இரவல் ஒளி பெறவேணும் இனி
    தொடர்ந்து வருவேன்
    மனம் கவர்ந்த அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிக்க நன்றிகள்! தங்கள் ஆதரவு என்னை ஊக்குவிக்கும்
    -கிரிகாசன்

    ReplyDelete