Sunday, January 8, 2012

இன்பக் கனவுகள்

கனியோடு சுவைசேர்ந்த இன்பம் -  நற்
  கலையோடு எழில்காணும் வண்ணம்
பனியோடு குளிர்சேரும் தன்மை -  எனப்
  படைத்தானே இறைவன், ஏனென்னை
தனியாக மனம் ஒன்று வைத்தே -  அதில்
     தாங்காத சுமை ஏற்றிவிட்டு
இனிஓடி விளையாடு என்றே -  இந்த  
    உலகத்தின் எனை வாழ விட்டான்

வரியாகப் பலகோடு வைத்து -  அதில்
  வளைவாகக் கீறல்கள் போட்டு
புரியாத கோலங்கள் என்று -  ஏன்
   புனைந்தானோ மனிதமும் அன்று
புரியாத வாழ்வென்று தந்தும்  = அதில்
  புதிதாகத் துன்பங்கள் என்றும்
பெரிதாக இல்லாத இன்பம் - அப்
  பிறை சூடும் இறைதந்த சொந்தம்

மனிதா நீ ஏனிங்கு வந்தாய்  - உன்
  மனமென்னும் விதி கொண்டபோக்கில்
கனியாகும் வாழ்வென்று நின்று = அக்
  காலத்தின் அடிபட்டு வீழ்வாய்
இனிதான காட்சிகள் என்றும் - உன்
  இருவிழி கண்டதோ ரின்பம்
தனியாகி நிழல் போகும்போது -  அது
  தண்ணீரில் முகம் காணல் போலும்

பலகோடி வருடங்கள் ஆகி -  இப்
  பறந்தோடும் பந்தெனும் பூமி
தலைசுற்றித் தள்ளாடும் போது - எம்
  தவறோ இத்தரை கண்டவாழ்வு
நலம்விட்டு கிலிகொள்ளும் வாழ்வில் - ஓர்
 நடைபாதை முடிவாகக் காடு
பலம்கொண்ட வரை மட்டும் ஓட்டம்-  அவன்
  பறித்திட நின்றிடும் ஆட்டம்

புலனோடு எழுகின்ற ஆசை - வெறும்
  புவிமீது மனம் கொண்ட வேட்கை
சிலநேரம் மகிழ்வென்று ஆடி - கண்ட
  சுகம்யாவும் வெறுமையென் றாகும்
 மலர்மேனி தொட்டிட்ட இன்பம் -  நல்ல
  மதுவென்று கண்டதோ ருள்ளம்
பலமோடு சுகம் கண்ட பாசம் - இவை
  பனிமேடை கனல்கொண்ட தாகும்

2 comments:

  1. கனியோடு சுவைசேர்ந்த இன்பம் - நற்
    கலையோடு எழில்காணும் வண்ணம்
    பனியோடு குளிர்சேரும் தன்மை - எனப்
    படைத்தானே இறைவன்,

    அருமையான இன்பக்கனவுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. பாராட்டுகள் கவிதைமலர் செடிக்கு ஊற்றும் நீர் போன்றது. தங்களுக்கு மிக்க நன்றிகள்!
    -கிரிகாசன்

    ReplyDelete