Wednesday, March 2, 2011

கண்ணுறங்காய் கண்மணியே!_(ஈழ அன்னை)

ஆராரோ ஆரிவரோ ஆசைமகன் கண்ணுறங்காய்
ஆரமுதே முத்தேயென் அன்பே நீ கண்வளராய்
நீருறும் சின்னவிழி நித்திரைக்கு வாடுதடா
நெஞ்சோடும் சோகமுந்தன் நீள்விழியில் தோன்றுதடா

 
சீரேறும் சின்னமுதே சித்திரமே வாடுவதேன்
தேரேறிப் போனதந்தை தேடிவர வில்லையென்றோ
ஊரைக்கெடுத்தவர்கள் ஊரைவிட்டு ஓடும்வரை
உத்தமர்கள்போனவரோ ஊர்திரும்ப போவதில்லை

ஆறோடு சென்ற மரம் அலையேறி வந்தில்லை
நீரோடு சென்ற இலை நேரெதிர்த்து வந்ததில்லை
வாரியடித்த புயல் வாழும் பூவை விட்டதில்லை
ஊரில் புகுந்தபகை உயிரைவிட்டுசென்றதில்லை

வேரைப் பறித்தமரம் வீழ்ந்தபின் னெழுவதில்லை
ஊரைப் பகைத்த இனம் ஒன்றும் விடப்போவதில்லை
நீரை இறைத்ததென நெஞ்சை வெட்டி செங்குருதி
கோரக் கொலையும்செய்யக் கொப்புளித்துஓடுதடா

ஆராரோஆரிவரோ ஆரடித்து நீயழுதாய்
பேராழிமுத்தேஎன் பேசும்கிளிபொற்குடமே
தேசமழியுதென்றா தேன்மலரே நீயழுதாய்
திக்குப் பரந்ததமிழ் தேயுதென்றோ நீயழுதாய்

ஊரும் அழிக்கையிலே உற்ற தமிழ்ச் சொந்தமெலாம்
பாரில் பரந்திருந்தும் பாசமில்லை என்ற ழுதாய்
வீராதி வீரனென வித்தகனே நீவளராய்
நீயாளுங் காலம்வரும் நெஞ்சிலுரம் கொண்டுவிடு

ஒன்றாக ஊரைவெட்டி உன்மத்தம் கொண்டுபகை
தென்நாட் டசுரரெல்லாம் தீந்தமிழைக் கொல்லுகிறார்
தேன்நாடு பொற்தமிழம் தென்றல்பிண வாடைகண்டும்
ஊனுருகித் தான்கொதித்து ஓடிவரவில்லையடா

மேல்நாட்டில் தானிருந்து மெட்டியொலிபார்த்தமாமன்
மானாட்டம் பார்த்தபின்பு மண்ணை மறந்த தென்ன
தேனோடும் நாட்டினிலே தெருவோடிப் பிச்சைகொள்ள
வானோடும் கப்பலிலே வந்தெவரும் காக்கவில்லை

கண்ணே கனியமுதே கட்டழகே கண்ணுறங்காய்
மண்ணே தொலையுதென மன்னவனே எண்ணினையோ
நீரோடும் கண்ணிரண்டில் நித்திரையும் விட்டதேனோ
நெஞ்சோடு கொண்டதுயர் நிம்மதியைச் சுட்டதுவோ

நீயழுது என்னபயன் நித்திரையை கொள்ளுகண்ணே
நீயெழுந்து கேட்கும்வரை நேருவது ஏதுமில்லை
ஆரமுதே அன்பேஎன் ஆசை மணிரத்தினமே
தீரமுடன் நீவளர்ந்து தேசம்காக்க வேணுமடா

பாராளும் பாவிகளோ பந்தடிக்க எம்தலையா?
ஊரோடு உள்ளதெல்லாம் கொள்ளியிட்டு கொன்றிடவா?
நேரோடும் வாழ்விலெம்மை நீசமனம் ஏய்த்ததடா
நீவளர்ந்துகேளுகண்ணே நெஞ்சிலிதை வைத்துவிடு

ஊரு முறங்கையிலே உத்தமனே கண்ணுறங்காய்
பேரழிவு காத்திருக்கு பின்னரெழ வேணுமடா
நித்திரையில் நீவளர்ந்து நெஞ்சினுரம்கொண்டிடடா
இத்தரையில் உன்னையெண்ணி ஈழம்காத்து நிற்குதடா

1 comment:

  1. தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருந்தால் வந்து பார்க்கவும்

    பாரி தாண்டவமூர்த்தி
    http://blogintamil.blogspot.com/2011/03/3.html

    ReplyDelete