Tuesday, March 15, 2011

மங்கையர் பாடல் (காதில் வந்த கீதம்)

பயம்திரண்டு துணிவு என்றுமாறும் - நல்ல
பனிதிரண்டு திடமும் கொண்டு படகையும் மோதும்
நயமிழந்த தென்றல் புயல் ஆகும் - நாமும்
நல்லறிவு சக்தி கொள்ள நாடதும் ஓங்கும்

தீயெழுந்து ஓடிவந்த போதும் - ஒரு
திண்மை கொண்டு மோதிவிடும் தீரமும் வேண்டும்
மாயவலைபோல் விழுந்து மூடும் - நம்
மனதெடுக்கும் உறுதி கூர்கொள் வாளென கீறும்

பெண்ணுயர்வு வேண்டின் நல்ல வார்த்தை - நாமும்
பேசி உள்ளஅன்பு கொண்டு வாழ்ந்திட வேணும்
அன்னை யென்றுகொண்ட குணம் ஆற்றல - நாமும்
அத்தனையும் கொண்டுவாழ்வில் உயர்ந்திட வேணும்

பெண்கள்வெறும் பிள்ளை பெற்றுக்கொள்ள - இந்த
பேருலகில் வந்த தென்ற எண்ணம் மாறணும்
மண்ணில் இவள் இன்றிவாழ்வு ஏது - என்று
மாலையிட்ட மன்னவரும் எண்ணிடவேண்டும்

வெட்டுமிடி வீழ்ந்திடினும் வேகோம் - கையை
விட்டெடுத்து மின்னல் கொண்டு பந்துகள் செய்வோம்
கொட்டி மழை பெருகினாலும் தாழோம் - அங்கு
கீழ்விழுந்து நீந்தியோடி கரையினைச் சேர்வோம்

தட்டிடுவோம் கைகள் தனைச் சேர்த்து - பெண்கள்
தாண்டாதோர் இடருமில்லை காதலும் சேர்த்து
கட்டிடுவோம் வாழ்வில் இன்ப வீடு - ஒளி
காட்டிடுவோம் அன்பு என்ற தீபமும் கொண்டு

பெட்டியிலே பாம்பு என்று கூனி - நாமும்
பேதைமையில் ஊரறியாப் பெண்ணென வாழா
எட்டிடுவோம் இமயங்களைத் தாண்டி! - நாமும்
இத்தரையும் ஆண்டிடுவோம் என்று நிரூபி!

No comments:

Post a Comment