Thursday, March 3, 2011

சிவனே உனைத் தொழுதேன்....! கவிதை

கணமும் உன்னை நினயாதுள்ளம்
இருந்தேனே யாயின்
பிணமாய் வாழ்ந்தே னென்றே எண்ணும்
பித்தம் கொண்டேனே
மணமாய் வீசும் மலர்கள் தூவி
மனதால் நிதம்போற்றி
குணமாய் வாழக் கும்பிட்டே உன்
கோவில் வந்தேனே

இறைவா நீயோ தணலாய் நாமும்
எரியும் வேளைதான்
நிறைவாய் உறையும் பனியாய் நிற்கும்
நிலையைக் கொண்டாயோ
உறைவாய் எங்கும் உள்ளாய் ஈசா
உமையின் பாகோனே
விரைவாய் எம்மை காப்பாய் என்று
வேண்டிக்கொண்டோமே

முறையாய் கல்லுள் காணும் தேரைக்
கொருவாய் யுணவைத்தான்
தருவாய் நீயும் என்றே பகர்வார்
தரணிக் கறிஞோரே
உருவாய் அருவாய் நின்றாய் நீயோ
ஈழத்தோர் மட்டும்
திரிவாய் பிணமாய் எரிவாய் கரியாய்
தெருவில் என்றாயே

உருகாய் என்றே உருகிக் கேட்டும்
உருகா நின்றாயே
பெருவாய் கொண்டே பேயாய் சிங்கப்
பிறவிக் குரியோனாம்
கருவாய் உள்ளோர் தொட்டு, கூனிக்
கிழமாய் போனோரும்
திருவாய் மொழியிற்தமிழர் என்றால்
தலையைக் கொய்தானே

உமையோ கூந்தல் வாரும்போது
உள்ளம் கிளர்ந்தாயே
இமையாள் கூந்தல் இனிதே வாசம்
இயல்பே என்றாயே
எமையோ தீயில் அள்ளிபோட்டு
எரியும் போதோநீ
சுமையாய் லட்சம் கூந்தல் கருக
சிலையாய் நின்றாயே

பிழையாய் கவியை குற்றம்
கண்டபுலவர் நக்கீரன்
அழலாய் எரியச் செய்தே நீயும்
அவனைக் கொன்றாயே
பிழையாய் தமிழர் கோரக்கொலையை
பெரிதாய் செய்தோனும்
குளமா யுதிரம் கொட்டக் கொல்ல
குளிரக் கிடந்தாயே

எதுநாம் செய்தோ மிறைவா உன்னை
இதயம் நம்பித்தான்
கதியாய் கைகள் கூப்பித் தொழுதோம்
கதறிக் கேட்டோமே
சதியா செய்தாள் கங்கை உந்தன்
சடையில் கொண்டாயே
நதியாய் கண்ணை மூடிபாய்ந்து
நாட்டுக் குழைத்தாளோ

விதியோ நாமும் வீரம்கொண்டு
வேங்கை போலத்தான்
எதிரிக் கிணையாய் இன்னும் மேலா
யேற்றம் கண்டோமே
புதிதாய் முழுதாய் படைகள் மூன்றும்
கொண்டே தமிழீழம்
மதியும் மறமும் கொண்டோர் தலைவன்
முடிகொண் டாண்டானே

வெல்லக் கிடையா வீரமென்றே
வியந்தே அஞ்சித்தான்
கொல்லக்கூடா நஞ்சைபோட்டுக்
கொன்றார் புவியோரே
மெல்லக் கடலை அமுதம் வேண்டி
மேலோர் கடையத்தான்
கொல்லும் நஞ்சு திரளத் தின்றே
குலமே காத்தாயே

எம்மை தமிழைக் கொல்லநச்சுக்
குண்டைபோட்டாரே
அம்மை மடிமேல் கொண்டோன்
கண்டும் அசையாதிருந்தாயே
வெம்மைக் குரிய நஞ்சை வாயில்
கொள்ளக் கேட்டோமா
நம்மைக் கொல்லும் நஞ்சுகுண்டை
பஞ்சுசென் றாக்காதேன்

வஞ்சங் கொண்டு யாகம்செய்து
வாழ்வில் உன்னைத்தான்
அஞ்சும்புலியை ஆக்கிச் சிவனே
அழியென்றதை ஏவ
மிஞ்சும் கோபம் கொண்டே தோலை
மேனிக் குடுத்தாயோ
வஞ்சம் மாறா தின்றும் வேங்கை
கொன்றே நின்றாயோ

அஞ்சும் அறிவும் கெட்டே ஈசா
அழிவைச் செய்தாயே
பஞ்சம் என்றால் ஆக்கும்காக்கும்
பிரம்மன் திருமாலும்
மஞ்சம்கண்டு தூக்கம்கொண்டார்
மதுவாம் அமுதுண்டோ
கொஞ்சம்கூட காவாதெம்மை
கொல்லக் கிடந்தாரே!

சிவனே நீயோ எம்மைக் காவல்
செய்யும் மனதின்றி
சிவனே என்று இருந்தாலென்ன
சிறிதாய் மனம்கொண்டு
அவனேஒருவன் அகிலம் அஞ்ச
அவனிக் கொளியாக
பவனி வந்தான் பகலின்வெம்மைக்
கதிரோன் வாரானோ

No comments:

Post a Comment