Friday, March 18, 2011

கடலை ஆளுவோம்! 2

அன்றோஒருநாள் அம்மாஅருகே அன்பில் திளைத்திருந்தேன்
நின்றே பெய்யுமழையின் வெள்ளம் நிலம் மீதோடக்கண்டேன்
தென்றல்வீசிச் சாரலடித்தே தூவானம் நனைக்க
ஒன்றாய் இரண்டாய் ஒற்றைகிழித்து ஓடம்செய்துவிட்டேன்

எட்டுகப்பல் நீரில்ஓட்டி எண்ணிப் பெருமைகொண்டேன்
கிட்டும் இன்பம் காகிதக் கப்பல் கவிழா வரைகண்டேன்
விட்டே குளமும் வாய்க்கால் என்று விந்தை உணர்வு கொண்டேன்
தட்டிக்கேட்கும் தலைவன்வந்து தமிழால் ஆளும்வரை

வெட்டிகிழித்து விரைந்தேஓடும் வெற்றிப்படகுகளை
விட்டுக்கடலில் விளையாடித்தான் வேங்கை புன்னகைத்தான்
சுட்டுவெடித்துப் பகைவர்கப்பல் தூள்தூள் என்றாகி
கட்டுக் குலைந்து கடலில்மூழ்கக் கண்டேன் வீரமதை

திசைகள் எட்டும் திரைகடலோடி திரிந்தார் வீரமது
அசைவில் புயலும் அடியில் இடியும் ஆனதுகண்டேனே
விசையோ டுலவும் படகில் தமிழன் வெற்றிக்களிப்புடனே
இசையும் கொடியும் எழுந்தேஆடத் திரிந்தான் தலைநிமிர்ந்தே

நெய்தல் குமரர் நிம்மதிகண்டு நீரில்மீன் கொண்டு
தையல்தம்மின் கண்ணில் அன்பும் காதல் தனைக்கண்டு
வெய்யில்காயும் மீனைப்போலே வெளியே காய்ந்தாலும்
கையில்காசும் களிப்பும்சுகமும் கண்டார் வாழ்வினிலே

கொள்ளிப்பேயாய் வந்தார் விதியும்கொண்டே வெறியாடி
அள்ளிச்செல்லும் வெள்ளம்ஆக அத்தனையும் இழந்தோம்
தெள்ளதெளியும் நீரைபோலே திகழும் வாழ்வுடைந்து
கள்ளிக்காடாய் கட்டை சுடுமோர் காடென்றாச்சுதடா

நீலஒளிவெண் மேகத்தோடு நின்றே வானோடி
ஆழப்பரந்த அலைகள்மீதும் அலைந்தேகடலோடி
காலாட்படைகள் கட்டு உடைத்து கயவர் பந்தாடி
காலாகால வரலா றொன்றில் தலைவர் தானிருந்தார்

சொல்லத்திறனும் பெருமைகொண்டே சுகமாய் ஆகிறதே
இல்லா திந்த உணர்வு எங்கள் இழிமைகொண்டோராம்
கல்லாய் நெஞ்சைக் கொண்டே எம்மைக்காட்டிக் கொடுத்தாரே
வல்லமையின்றி வாழ்வைக்கெடுத்தே வாழ்ந்தார் பயனென்ன

மெல்லத்தெரிதல் காணாய் இன்றோ வானில் விடிவெள்ளி !
கொல்லக்கண்டவர் மெல்லஎழுந்தே கூறும் மனம்கொண்டார்
வண்ணத்திரையில் மானும் மயிலும் வந்தே சதிராட
கண்ணால்கண்டே கவலைவிட்டுக் கடமை மறக்காதே

உரிமைப்போரை உலகத்தெங்கும் ஒன்றாய் கைக்கொள்ளு
தெரியும்பாதை திடமாய்காலைத் துணிந்தே வைத்துவிடு
விரியும் ஈழம் வெகுநாளில்லை வேகம்கொண்டுஎழு
திரையும்கடலில் விரையும் கப்பல் மீண்டும் கடலுனது

No comments:

Post a Comment