Friday, March 18, 2011

கடலை ஆளுவோம்! 1

வளைகடலும் பெரும் அலையும் வாய்திறந்துபேசுமொரு
வார்த்தை கூறும் சக்தியிருந்தால்
நுளைகுழியுள் விரையும்நண்டு நின்றுகதை கூறும்எங்கள்
நிமலரிவர் கொண்ட புகழ்தான்
அளையு மணல் உருள்திரையும் அழுதுமனம்கதறும்அந்த
ஆழ்கடலின் வேங்கைப் படைதான்
மழையுமிடி மின்னலென மாகடலில் வாழ்ந்தவர்கள்
மாறிநின்ற தெங்கே என்றுதான்

படையெடுத்து வந்தபகை பாய்ந்துவந்தபோதவரின்
பலமுடைத்து ஓடவைத்ததை
நடைபிழைத்து நகருமந்த நண்டு கேலிசெய்யுதென்று
நகைநகைத்து அலைஉருண்டிடும்
இடைநிறுத்தி இடர்கொடுத்து எதிரி வென்றமைந்தரவர்
ஏற்றம் கண்டு பெருமை கொண்டுமே
உடைத் தழிந்த கப்பல் டோரா உள்ளெடுத்தஆழிதன்னை
ஓவென்றூதிக் காற்று போற்றுமே

படபடக்க வெடியினோசை பளபளக்க அலைகிழித்து
பறந்த வேங்கைமைந்தர் கப்பலும்
துடிதுடித்து இளைமையோடு துணிவெடுத்த தலைமையோடு
தோன்றுமெழில் என்னசொல்லுவேன்
கடலிலொரு கப்பல்விட்ட தமிழன் என்று பெருமை சொன்ன
காலம் அயல் அன்றிருந்தது
கடலிலொரு போர்தொடுத்து கடற்படைதான் ஆட்சிசெய்த
காவலனின் பெருமை பெரியது

தரையடித்துவீழுமலை தலையடித்துகதறுவதாய்
தவிப்பெடுத்தபோது தென்றலோ
விரைவெடுத்து ஓடுமென்னை விடஎடுத்த வேகமுடன்
வினைமுடித்த வீரம்பேசுமே
வரைவிடுத்து எல்லையற்ற வகையெடுத்த படகெடுத்து
வளைவெடுத்து மைந்தர் ஓடவே
புரையெடுத்து கிறுகிறுத்து புலன்விடுத்துஅதிசயித்து
போர்தொடுத்த பகை வியக்குமே

மறமெடுத்த வீரர்தம்மின் உரமெடுத்த தோள்வலிமை,
மனமெடுத்த வலிமை ரண்டிலே
திறமெடுத்த தேதுஎன்று எதையெடுத்துக்கூற அங்கு
இலட்சியமே வலிமை கண்டது
புறமெடுத்துஓடச் சிங்கக் கொடிபிடித்த படகுகளை
அடிஅடித்து ஓடவைக்கவே
அறமெடுத்த நிலையைவிட்டு அயல்கிடக்கும்நாடு அச்சம்
அகமெடுத்து பிழைவிடுத்தது

உலகெடுத்த விதியுடைத்து படையெடுத்து வந்தவரோ
உடமைதோல்வி என்று கண்டதும்
தலைகடுத்து விசர்பிடித்துக் கிலியெடுத்து வியர்வைகொண்டு
தரமும்கெட்டவேலை செய்ததே
இமயம் தொட்டுக் குமரிவரை எமதுஎன்றுஆண்டதமிழ்
இறைமை கொண்ட கடல்பரப்பையே
சமயமிது இழந்துவிட்ட சரித்திரத்தில் தமிழ்படித்த
சபலமுள்ள அரசும் உள்ளது


மறைவெடுத்தஎங்கள்மன்னன் மறுபடிக்கு வந்துஎங்கள்
மாநிலத்தைஆழும் நாள் எப்போ?
கறைபிடித்த காலமிது கருகிவிட்ட வாழ்வுஇது
கண்மறைந்து போவதுமெப்போ?
துறைமுகத்தில் எங்கள்கொடி தடதடன்று காற்றிலாடி
திமிரெடுத்து நேர்பறப்பதை
இறை, எனக்கு வரமுமீந்து எமனெடுத்து எறிகயிற்றை
இடைநிறுத்தி ஈழம்காட்டுவாய்

No comments:

Post a Comment