Thursday, March 24, 2011

வானில் கண்ட விந்தை !

மானம் எங்கள் சொத்துஎன்று மனதில்கொள்ளடி-இந்த
மண்ணுமெங்கள் சொந்தமென்று உறுதிகொள்ளடி
தேனும் பூவின்சொந்தமென்று சேர்ந்து பாடடி - ஈழ
தேசமெங்கள் சொத்துஎன்று திண்மைகூறடி

வானமெங்கள் சொந்தம்மென்று வார்த்தை பேசடி- ஈழ
வானஎல்லைக் காற்றுமெங்கள் வாழும் மூச்சடி
தானதர்மம் போட ஈழம் தட்டில்சாதமோ -எங்கள்
தாயின்நாடு சத்திரமோ தர்மசாலையோ

வானமுள்ளே வந்துபோக விட்டதாரடி -குண்டு
வாரிமக்கள் மீதுபோட வைத்த தாரடி
ஈனமுள்ள தேசம்ஒன்று ஈதின்காரணி- அந்த
எத்தர்செய்த வேலை விக்கி லீக்சிலே படி

தெய்வம்காண கோவில்செல்லதீபம் போனது அங்கு
தேடும் கோவிற் தெய்வமில்லை பேய்கள் ஆடுது
பொய்யுமான வேஷமிட்டு போலியாகவே அவர்
போடும் மொரு கொள்கைதானும் இப்படியாமே

”நாடிச்சென்று நன்மைசெய்தல் போலவே நடி -இந்த
நானிலத்தைஏய்த்த பின்னர் நச்சுக்குண்டடி
காந்திஎன்ன புத்தரென்ன விட்டுத் தள்ளடி -அவர்
காலம்போச்சு கத்திபேசும் கையில் கொள்ளடி

நீதிஎன்றும் பார்ப்பதில்லை நீள்கருந்துணி -அதன்
நெற்றியோடு கண்கள் மூடி நிற்குதாமடி
பாதியாக ஈழமக்கள் வெட்டிப்போடடி -மேனி
பார்த்தெடுத்து நீதிதேவன் தட்டில்போடடி”


சத்தியமும் கண்ணியமும் கட்டுப்பாடுமே இனி
காற்றிலே கரைந்திடட்டும் கண்ணைமூடென
அத்தனையும் நீதிகெட்டு ஆடிமுடித்தார் அவர்
ஆன பதில் சொல்லுமொரு காலமும் வரும்

வான்புலிகள் செய்ததந்த வீரம் பாரடி -அவர்
வைத்தகுறி பொய்த்ததில்லை போட்ட புள்ளடி
சேனைபடை போர்விமானம் சிதறியோடவே அவர்
செய்த தீரவீரம் தானும் திரும்புமோ இனி

கோடிஎன்று வானில்வந்து கொட்டுவர்குண்டு -பகை
கொட்டுவது குண்டுஅல்ல கோழைகள் நெஞ்சு
ஓடிவேங்கை வானில்வீரர் போடுவர் இரண்டு -இந்த
உலகமெல்லாம் வாய் பிளந்து பயந்தது பின்பு

நீலவிண்ணும் நீள்கடலும் நின்றமண்ணிலும் -நாம்
நீண்டகாலம் கண்ட ஆட்சி நிலைமையில்அஞ்சி
ஆழவென்று ஈழமகன் எண்ணினாலுமே -இந்த
அகிலமெல்லாம், அவன்குடைக்குள் அடங்குமோவென

நிலம்பறித்தார் நெஞ்சினிலே வஞ்சமிழைத்தார் -ஒரு
குலமழித்தார் கோவில்மனை குடிகள்அழித்தார்
நிலமிழந்தோர் நாமும் இனி எழுந்திடல்வேண்டும் -வரும்
நீதிப் போரில் வென்று வானில் பறந்திடவேணும்

No comments:

Post a Comment