Wednesday, March 16, 2011

பெண்ணின் உயர்வு எதில் உண்டு (ஈழப்பெண்)


நீரோடும்விழிகாய்ந்து நிம்மதி வேண்டின் நெஞ்சம்
ஊரோடு ஒன்றுபடும் ஒற்றுமை வேண்டும்
நேரோடும் பாதையிலே நீவிரைந்தே எங்கள்தமிழ்
நேசமெனும் தாயகத்தை வென்றிட வேண்டும்

தேரேறும் தெய்வமெனத்  தேசமதைக் காதலித்தே
தேன்தமிழர் வாழ்வுகாக்கத் துணிந்திட வேண்டும்
வேரோடும் மரமானால் வெட்டவரும் கத்தியின்மேல்
விலையாகிப் பிடியாகா விதிகொள்ளல் வேண்டும்

போராடும் களந்தன்னில் புறமோடி வீழ்ந்ததெனில்
பாலோடும் இடமிழப்பேன்  பாராய்  என்றாள்
மார்போடு வீரமெழும் மறம்மகளாம் தாயினைபோல்
மகன் அருந்தும் பாலில்வீரம் இருந்திட வேண்டும்

அன்புடனே தமிழ்வீரர் அரசபழங் கதைகள்கூறி
அவர்கண்டவாழ்வின் அறம்   அறிவிடவேண்டும்
பண்டாரவன்னியனும் படைகொண்டஎல்லளான்
பகைதன்னைஎதிர்கொண்ட விதம்சொலவேண்டும்

மானத்தை விட்டவனை மனிதநடைப் பிணமென்று
மகனவனைத் தினமோதி மாற்றிட வேண்டும்
தானுந்தன்  உடல்மீது தளைந்தோங்கும் மதவீரம்
தாய் தமிழைக் காக்கவென்றே கூறிடவேண்டும்

இத்தனையும்சொல்லிஅவன் இழிமகனாய் வந்தால்நீ
எந்தன்மகன் இல்லையென இகழ்ந்திடவேண்டும்
ரத்தவெறிகொண்டவரின் கையாளாய் ஆகிவிட்டால்
முத்தமிழின் எதிரிஎன முடிவுசெய்யணும்

ஈனம்கொள் மனதுடனே எதிரி வர  வழிகாட்டும்
இனம்கொல்லும்தமிழனவன் இழிபிறப்பேயென்று
மானமெனும் உடைகளைந்து மதிகெட்ட பிணமாகி
மறைகாட்டு பேயெனவே மகனைக்கூறணும்

தாயென்றும் அவன்கொண்ட தங்கையவர் தாமுமொரு
தலைவி எனும் வாழ்விணைந்த தலைமகள்தானும்
நோயென்னும் மனமெடுத்தாய் நில்லாதே போ எனவே
பேயலைந்ததாய் தெருவில் போக்கிடவேண்டும்

பாயொன்றில்துணையிருந்து பாசமுறும் மனைவிதனும்
சீயென்று சினந்தவனை சிறுமை செய்யோணும்
காயம்தொழு நோயதனைக் கண்டவனாய் கைவிடுது
நாய் புசிக்கும்தட்டில் நறுஞ் சோறிடவேண்டும்

மாமியொரு  மருமகளோ மச்சாளோ  மகளவளோ
மங்கையராம் அத்தனையும் சேர்ந்திடவேணும்
பாவியவன் தான்திருந்தி பாதை வழிநேரில் வரப்
பார்த்து மனம் மாற்றிவிடு பைந்தமிழ் வெல்லும்

ஆயிரமா யுயிர் அழியும் ஆக இவன்ஒருவனாலே
ஆக்குவதும் அழித்திடவும் அன்னையால் முடியும்
சேயுயர்வு கொள்வதற்கு சிறுவயதில் பிஞ்சினிலே
தாயிருந்து நெஞ்சினிலே உரமிட வேண்டும்

துரோகமனம் கொண்டவர்கள் தூயவராய் நின்றிருந்தால்
தோல்வியென்ற தில்லை ஈழம் தோன்றியிருக்கும்
யாரோஇவர் நச்சுமனம் கொண்டவராய் இல்லையெனில்
நாடுயர வாழ்வுயர்ந்து பெண்வளம் உயரும்

2 comments:

 1. நல்லதொரு கவிதை. இது மரபுக்கவிதையா? சீர் தளைப் பிரித்துப் பார்க்க தெரியாது,, இருந்தாலும் எதுகை மோனை எல்லாம் பார்க்கும் போது மரபுக்கவிதையாக தெரிகிறது. இப்போது மரபுக் கவிதை எழுதுவோர் எல்லாம் அத்திப் பூத்தாற் போல ஆச்சு !!

  ReplyDelete
 2. முதலில் நன்றிகள்!
  கவித மரபு கற்றவனல்ல நான். இருந்தும் மரபுக் கவிதைகளை அதிகம் நேசிப்ப்டதால் அவைகளின் சாயலில் எழுத முயற்சிக்கிறேன்.

  உங்கள் கேள்விக்கு முதலாவது கவியில் விடை உண்டு
  ’இங்கே வரும் கவிதை’ என்னும் 2010 september கவிதையை அன்புடன் காணவும் மீண்டும் நன்றிகள்
  --கிரிகாசன்

  ReplyDelete