Thursday, March 10, 2011

புத்தாண்டுக் கொண்டாட்டம்


தெள்ளுத் தமிழ்வாழும் தீம்பொழில் கொள்ளொரு
     தேனிசைநாட்டினிலே
அள்ளிமதுரமென் றாசைகொள்ளத்தமிழ்
    அன்புகொள் வீட்டினிலே
நள்ளிரவிலொரு கள்ளனைப் போல்வரும்
    நங்கை புதுவரவை
கொள்ளி யெடுத்துக்கொண் டோடினான் சின்னவன்
   கொண்டாடவாம் வெளியே

சட்டுசடுவெனத் துப்பாக்கி போலொரு
    சத்தம் நிறைந்திருக்க
கிட்டப் போகாதேடா ஓடுஒடுவென்று
    கத்தி குளறிநிற்க
விட்ட புகைதனில் மூச்சுத் திணறிட
    விரைந்து மூக்கழுத்த
சொட்டுவிழிகளில் நீர்தளும்பப் புதுச்
    சுந்தரி ஆண்டு வந்தாள்

விண்ணி லதிர்ந்தன வேடிக்கையாய் பல
    வண்ண மலர்வெடிகள்
எண்ணம் நிறைந்திடக் கண்னைகவர்ந்திடும்
   இன்ப ஒளிச்சிதறல்
மண்ணில் நம்மாந்தரும் எண்ணியஎண்ணங்கள்
    மற்றும் சுதந்திரங்கள்
கண்களின் முன்னே  வெடித்துத்சிதறின
  போலும் சிதறினவாம்

பொன்னெனும் நாளினில் பூமிவருமெங்கள்
    புத்தம் புதுவரவே!
இன்பமெனஎண்ணி ஏழைமகிழ்ந் திடு
   மெங்கள் புதிய ஆண்டே
என்னவிழைத்திட எண்ணமெடுத்தனை
   இந்த உலகமதை
உன்னதமாக்கிடவா  உள்ளவரின்
   உயிரை வாங்கிடவா?

தேருதல் வந்திட தேசம் மகிழ்ந்திடும்
   தென்றலும் பாட்டிசைக்கும்
மாறுதல் கொண்டிட ஆளுபவர் இடம்
  மாறிப் புதுமைகொள்ளும்
ஆறுதல் என்பது ஏழைக்கில்லை அது
   ஆட்சியில் கொள்ளையிடும்
கூறுகள் போட்டுப் பிரிக்குமொருசில
  கூட்டத்துக்கே மகிழ்வு

பத்துகள் போய்ப்பதி னொன்றுவருகுது
     பாரினில் மாறுதல்கள்
எத்தனைதான் நிகழ்ந்திடுமோ இது  
   எங்களுக் கானதில்லை
சொத்துக்களும் அந்ததேசத்தை ஆண்டிடும்
    சிங்கம் கழுகுகளும்
மொத்தமும் என்னது உன்னது என்றிட
   மொய்யெழுதும் வரைபு

புத்தாண்டே நீயுமே போய்வரும்மாறுதல்
    புதிய வாழ்விடுமா
எத்தனின் மைந்தர்கள் இட்டசதிகளை 
   ஏந்திழை கொன்றதுமாய்
நித்தம் அடைந்திடும் நீசக்கொலைகளை
   நின்றிடச் செய்துவிடு
இத்தரை மீதினில் உன்வரவை எங்கள்
   உள்ளத்தில் போற்றிடுவோம்

கையெடுப்போம் உந்தன்கால்விழுவோமெங்கள்
  கன்னத்தில் போட்டிடுவோம்
மெய்யுருட்டிப் பெருந் தேரிழுத்து உன்னை
   தெய்வமெனத் தொழுவோம்
பொய்யை விரட்டியோர் பாதைவகுத் திந்தப்
  பாவிகளை உலகில்
உய்துவிடவென வெங்கள்ஈழ மமைத்திட
   ஓர்வழி செய்துவிடு!

No comments:

Post a Comment